1. மகேந்திர வர்மன் அரசியல் மகேந்திரவர்மனுடைய தகப்னரான சிம்மவிஷ்ணு காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பல்லவ இராச்சியத்தை அரசாண்டார். சிம்மவிஷ்ணு ஆட்சியை ஏற்றுக் கொண்டபோது, அவருடைய பல்லவ இராச்சியம் ஆந்திர நாட்டையும் தொண்டைமண்டலத்தையும் கொண்டதாக இருந்தது. பிறகு சிம்மவிஷ்ணு சோழநாட்டை வென்று தமது பல்லவ இராச்சியத்துடன் சேர்த்துக் கொண்டார். இச்செய்தி வேலூர்ப் பாளையம், காசாகுடி செப்பேட்டுச் சாசனங்களினாலே தெரிகிறது. “நெல் வயல்களையும் கமுகஞ் சோலைகளையும் தனக்கு நகைகளாகப் பூண்டு விளங்குகின்ற கவீரனுடைய மகளினால் (காவிரி ஆற்றினால்) பொலிகின்ற சோழர்களின் சோழநாட்டை அவன் (சிம்மவிஷ்ணு) விரைவில் கைப்பற்றினான்” என்று வேலூர்ப்பாளையச் சாசனத்தின் 10 ஆவது வடமொழிச் செய்யுள் கூறுகிறது.1 “பிறகு அவனிசிம்மனாகிய சிம்மவிஷ்ணு அரசாட்சிக்கு வந்தான். அவன் தன் பகைவர்களை ஒழிக்கக் கருதி மலய களபா மாளவ சோழ பாண்டிய அரசர்களையும், தன் கைவன்மையினால் தருக்கியிருந்த சிங்கள அரசனையும் கேரளனையும் வென்றான்.” என்று காசாகுடி செப்பேட்டுச் சாசனம் 20 ஆவது செய்யுளில் கூறுகிறது.2 இந்தச் சாசனப் பகுதிகளினாலே நாம் தெரிந்து கொள்வது என்ன வென்றால், சிம்மவிஷ்ணு சோழநாட்டின் மேல் படையெடுத்தபோது, சோழனுக்குத் துணையாகக் களபர, மாளவ, பாண்டிய, சிங்கள, கேரள அரசர்கள் வந்தார்கள் என்பதும் அவர்களையெல்லாம் சிம்மவிஷ்ணு வென்று சோழநாட்டைக் கைப்பற்றிக் கொண்டான் என்பதும் ஆகும். இவ்வாறு சிம்மவிஷ்ணு காலத்தில் பல்லவ இராச்சியம் வடக்கே கிருஷ்ணாநதி முதல் தெற்கே புதுக்கோட்டை வரையில் பரவி
1. S. I. I. Vol II. Page, 501 - 516 2. S. I. I. Vol II. Page, 342 - 361 |