பக்கம் எண் :

220மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

முதல், தெற்கே புதுக்கோட்டை வரையில் இருந்தது. சோழ அரசர், பல்லவ அரசர்களுக்குக் கீழடங்கிச் சிற்றரசராக இருந்தார்கள். உறையூர், திருவாரூர், பழையாறை முதலிய இடங்களில் சோழ குடும்பத்தவர் பல்வருக்குக் கீழ்ச் சிற்றரசராக அரசாண்டு வந்தனர்.

பல்லவ இராச்சியத்திற்குத் தெற்கே பாண்டிநாடு இருந்தது. மகேந்திரவர்மன் காலத்தில் பாண்டிநாட்டை அரசாண்ட பாண்டியன் சேந்தன் என்பவன். இந்தச் சேந்தன், பாண்டியன் மாறவர்மனுடைய மகன்; பாண்டியன் கடுங்கோனுடைய பேரன். இந்தச் சேந்தன் எத்தனை ஆண்டு அரசாண்டான் என்பது தெரியவில்லை. இவனைப் பற்றி வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது.

“மற்றவர்க்கு மருவினிய ஒரு மகனாகி மண்மகளை மறுக்கடிந்து விக்ரமத்தின் வெளிற்பட்டு விலங்கல்வேல் பொறி வேந்தர் வேந்தன் சிலைத் தடக்கைக் கொலைக் களிற்றுச் செழியன் வானவன் செங்கோற் சேந்தன்.”1

இந்தச் செங்ககோற் சேந்தனுடைய மகன், நெடுமாறன் என்பவன். “நிறைக் கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன்” என்று இவனைச் சுந்தர மூர்த்தி சுவாமிகள் கூறுகிறார். இந்த நெடுமாறன் முதலில் சமண சமயத்தவனாக இருந்தான். பிறகு திருஞானசம்பந்தரால் சைவ சமயத்தவனாக்கப்பட்டான். திருநாவுக் கரசர் பாண்டிநாட்டில் தல யாத்திரை செய்தபோது அவரை வர வேற்றுப் போற்றியவன் இவனே.

பாண்டி நாட்டிற்கு மேற்கே சேரநாடு இருந்தது. இக் காலத்தில் சேர நாட்டை யரசாண்ட சேர மன்னன் பெயர் தெரியவில்லை.

மகேந்திரவர்மன் காலத்தில் பாரத நாட்டின் அரசியல் நிலை இத. இனி, பாரத நாட்டுடன் சேர்ந்ததும் தமிழ் நாட்டின் அருகில் உள்ளதுமான இலங்கைத் தீவின் அரசியல் நிலை இக் காலத்தில் எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம்.

தமிழ்நாட்டின் தென் கிழக்கில் சிங்களத் தீவு என்னும் இலங்கைத் தீவு இருக்கிறது. பண்டைக் காலத்தில் இந்தத் தீவிற்கும் தமிழ் நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. ஏனென்றால், பௌத்த சமயம் தமிழ் நாட்டில் சிறப்படைந்திருந்தது. காஞ்சிபுரம், நாகைப்பட்டினம்,


1. PP. 291-309. Epi. Ind. XVII.