பக்கம் எண் :

224மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

மொக்கல்லானனைக் கொன்று வெற்றிபெற்ற சிலா மேக வண்ணன், ஜேட்டதிஸ்ஸனை அநுராதபுரத்திற்கு வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ளும்படி அழைத்தான். ஆனால், இவனுடைய உண்மையான நோக்கத்தை யறிந்த ஜேட்டதிஸ்ஸன், தன்னைக் கொன்றுவிடுவான் என்று தெரிதந்து, இவனிடம் வராமலே மலைய நாட்டிலேயே இருந்து விட்டான். ஆகவே, சிலாமேகவண்ணன் இலங்கையின் அரசனானான்.

ஜேட்டதிஸ்ஸனுடைய அம்மாமன் சிறீநாகன் என்பவன் தமிழ் நாட்டிற்கு வந்து ஒரு சேனையைத் திரட்டிக் கொண்டு இலங்கைக்குப் போய்ச் சிலாமேகவண்ணனுடன் போர் செய்தான். ஆனால், இப் போரிலும் சிலாமேகவண்ணனே வெற்றி பெற்றான். இவன் ஒன்பது ஆண்டு அரசாண்டான். கடைசியில் நோய்வாய்ப்பட்டு இறந்தான். இவனுக்குப் பிறகு அக்கபோதி என்பவன் அரசானானான். இவனை மூன்றாம் அக்கபோதி என்று கூறுணுவர். சிறீசங்கபோதி என்றும் இவனுக்குப் பெயர் உண்டு.

அக்கபோதிக்கு மானா என்னும் பெயருள்ள தம்பியொருவன் இருந்தான். அக்கபோதி, மானாவைத் துணை வேந்தனாக்கி அவனைத் திக்கிண தேசத்திற்கு அரசனாக்கினான். அக்கபோதி நெடுங்காலம் அரசாளவில்லை. அவன் அரசாட்சிக்கு வந்த ஆறாவது மாதத்தில், மலைநாட்டில் ஒதுங்கியிருந்த ஜேட்டதிஸ்ஸன் (சங்கதிஸ்ஸனுடைய மகன்) சேனையொன்றைத் திரட்டிக்கொண்டு தாட்டா சிவன் என்னும் அமைச்சனுடன் அநுராதபுரத்தின்மேல் படையெடுத்து வந்தான். அக்க போதி, ஜேட்டதிஸ்ஸனுடன் போர்செய்து தோற்றான். தோற்று மாறுவேடம் பூண்டு தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்தான்.

வெற்றிபெற்ற ஜேட்டதிஸ்ஸன் இலங்கையின் அரசனானான். இவனை மூன்றாம் ஜேட்டதிஸ்ஸன் என்பர். இவனும் நெடுங்காலம் அரசாளவில்லை. ஏனென்றால், போரில் தோற்றுத் தமிழ் நாட்டிற்கு ஓடிய அக்கபோதி தமிழச் சேனையொன்றைத் திரட்டிக்கொண்டு இலங்கைக்கு வந்து ஜேட்டதிஸ்ஸனை எதிர்த்தான். இவன் அழைத்து வந்த தமிழப்படையின் தலைவன் வெலுப்பன் என்பவன். வெலுப்பன் என்பது வேலப்பன் என்பதன் திரிபாக இருக்கக் கூடும்.