பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு245

அழகான சிற்ப உருவங்கள் சிலவற்றையும் அமைத்தான். இவற்றைப் பற்றி இந் நூலில் வேறு இடத்தில் கூறுவோம்.

நரசிம்மவர்மன் இளவரசனாக இருந்தபோது, இவனுடைய தந்தையாகிய மகேந்திரவர்மன் ஆட்சியில், சளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசி, பல்லவ நாட்டின் மேல் படை எடுத்து வந்து அதன் வடபகுதியாகிய ஆந்திர நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டான்.1 அன்றியும், தலைநகரமான காஞ்சிபுரத்தின் மேல் புலிகேசி படை யெடுத்து வந்தான். மகேந்திரவர்மன் புள்ளலூர் என்னும் இடத்தில் எதிர்த்துப் போர்செய்து அவனை முறியடித்தான். இந்தப் போரில் இளவரசனாகிய நரசிம்மவர்மனும் போர் செய்திருக்கக்கூடும்.

மகேந்திரவர்மனுக்குப் பிறகு நரசிம்மவர்மன் அரசனானான். நரசிம்மவர்மன் காலத்தில், இலங்கையரசுக்குரிய மானவம்மா (மான வர்மன்) என்பவன் அரசு இழந்து காஞ்சிபுரத்துக்கு வந்து நரசிம்ம வர்மனிடத்தில் அடைக்கலம் புகுந்தான். மானவர்மன் நெடுங்காலம் இவன் ஆதரவில் இருந்தான். காஞ்சியின்மேல் சளுக்கிய அரசன் புலிகேசி படையெடுத்து வந்த காலங்களில் மானவர்மன் நரசிம்மனுடன் சேர்ந்து புலிகேசியை எதிர்த்துப் போரிட்டான். நரசிம்மன் வாதாபியை வென்ற பிறகு, தன் சேனையை மானவர்மனுடன் இலங்கைக்கு அனுப்பி இலங்கையை வென்று மானவர்மனை அந்நாட்டுக்கு அரசனாக்கினான்.

நரசிம்மவர்மன் காலத்திலும் புலிகேசி, மீண்டும் பலமுறை காஞ்சி புரத்தின்மேல் படையெடுத்து வந்தான். படையெடுத்துவந்த புலிகேசியை நரசிம்மவர்மன் பரியளம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங் களில் எதிர்த்துப் போர் செய்து முறியடித்தான். போர் நடந்த சூரமாரம், பரியளம் என்னும் ஊர்கள் எவை என்பது இப்போது தெரியவில்லை. மணி மங்கலம் என்பது, செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு தாலூகா வில் உள்ள மணிமங்கலம் என்னும் கிராமம் ஆகும். இது பல்லவரின் தலைநகரமான காஞ்சிபுரத்திற்கு இருபது மைல் தூரத்தில் இருக்கிறது.

மாமல்லன் புலிகேசியைத் துரத்தியதொடு நிற்கவில்லை. தன் தந்தை காலத்தில், பல்லவர்களுக்குரிய ஆந்திர நாடுகளைக் கவர்ந்து கொண்ட புலிகேசி காஞ்சிபுரத்தின் மேல் படையெடுத்து வந்ததையும், பின்னர் தன் காலத்தில் மீண்டும் பலமுறை காஞ்சியின்மேல் படை


1. இந்நூலாசிரியர் எழுதியுள்ள மகேந்திரவர்மன் என்னும் நூல் காண்க.