பக்கம் எண் :

28மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

இக்காலத்தில் மைசூர் இராச்சியத்தின் தென்பகுதிகளாக இருக்கிற பல நாடுகள் அக்காலத்தில் வடகொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தன. பேர்போன புன்னாடு, கப்பிணி ஆற்றங்கரை மேல் உள்ள கிட்டூரைத் (கட்டூர்) தலைநகரமாகக் கொண்டிருந்தது. அது சங்க காலத்தில் வட கொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தது. எருமை ஊரை அக்காலத்தில் அரசாண்டவன் எருமையூரன் என்பவன். எருமை ஊர் பிற்காலத்தில் மைசூர் என்று பெயர் பெற்றது. (எருமை - மகிஷம். எருமையூர் -மைசூர். எருமை ஊர், மைசூர் என்றாகிப் பிற்காலத்தில் கன்னட நாடு முழுவதுக்கும் பெயராக அமைந்துவிட்டது.)

இப்போதைய மைசூர் நாட்டில் உள்ள ஹளேபீடு (ஹளே - பழைய, பீடு - வீடு) அக்காலத்தில் துவரை என்று வழங்கப்பட்டது. துவரை, இக்காலத்தில் துவார சமுத்திரம் என்று பெயர் பெற்றுள்ளது. இங்கு ஒரு பெரிய ஏரியும் அதற்கு அருகிலே உள்ள மலையடிவாரத்தில் அழிந்து போன நகரமும் உள்ளன. இந்த நகரம் சங்க நூல்களில் கூறப்படுகின்ற அரையம் என்னும் நகரமாக இருக்கக்கூடும். துவரையையும் அதற்கு அருகில் இருந்த அரையத்தையும் புலிகடிமால் என்னும் அரச பரம்பரை யரசாண்டது. மிகப் பிற்காலத்தில் மைசூரை யரசாண்ட ஹொய்சளர், பழைய புலிகடிமால் அரச பரம்பரையார் என்று தோன்று கின்றனர். ஹொய்சள என்பது புலிகடிமால் என்பதன் மொழிப் பெயர்ப்பாகத் தெரிகின்றது.

கொங்கு நாட்டின் வடஎல்லை பழங்காலத்தில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு மைசூர் நாட்டில் பாய்கிற காவிரி ஆற்றுக்கு அப்பால் இருந்தது என்று கூறுவது வெறும் கற்பனையன்று, சரித்திர உண்மையே. அக்காலத்தில் கன்னட நாடு (வடுகநாடு) வடக்கே வெகுதூரம் கோதாவரி ஆறு வரையில் பரவியிருந்தது. இப்போது மகாராட்டிர நாடாக இருக்கிற இடத்தின் தென்பகுதிகள் அக்காலத்தில் கன்னடம் பேசப்பட்ட கன்னட நாடாக இருந்தன. பிற்காலத்தில் மகா ராட்டிரர், வடக்கே இருந்த கன்னட நாட்டில் புகுந்து குடியேறினார்கள். காலஞ்செல்லச்செல்ல அந்தப் பகுதி மகாராட்டிர நாடாக மாறிப் போயிற்று. இதன் காரணமாக, மகாராட்டிர பாஷையில் பல கன்னட மொழிச் சொற்கள் கலந்திருப்பதைக் காண்கின்றோம்.

இக்காலத்தில் உள்ள கன்னட (மைசூர்) நாட்டின் தென் பகுதிகள் அப்பழங் காலத்தில், தமிழ் நாடாக (வடகொங்கு நாட்டின் பகுதியாக)