பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு291

ஆராய்ச்சியில், இவ்வாழ்வார் அதே நூற்றாண்டில் ஆனால், மகேந்திரவர்மன் மகனான மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவர் என்பது தெரிகிறது. இதனை ஆராய்வோம்.

திருமழிசை ஆழ்வாரையும் அவர் சீடரான கணிகண்ணரையும் காஞ்சிபுரத்திலிருந்து ஒரு பல்லவ அரசன் “நாடு கடத்தினான்” என்று வரலாறு கூறுகிறது. இவர்களை “நாடு கடத்திய “பல்லவ அரசன் முதலாம் நரசிம்மவர்மன் ஆக இருக்கக்கூடும் என்றும், இவ் வரசர்கள் மிகுந்த சைவப் பற்றுள்ளவர்கள் என்றும் ஸ்ரீநிவாச அய்யங்கார் கருதுகிறார்.1

இவர்களை மகேந்திரவர்மன் நாடு கடத்தியிலிருக்க முடியாது. அவன் மகனான முதலாம் நரசிம்மவர்மன்தான் நாடு கடத்தியிருக்கக் கூடும் ஏனென்றால், மாமல்லபுரத்திற்கு அப்பெயரைச் சூட்டியவன் நரசிம்மவர்மனே. மாமல்ல புரமாகிய மாமல்லனையைப் பூதத்தாழ்வார் தமது செய்யுளில் பாடியிருப்பதை மேலே காட்டினோம். ஆகவே, மாமல்லனான நரசிம்மவர்மன் காலத்தில் இருந்த பூதத்தாழ்வாரின் நண்பரும் சமகாலத்தவருமான திருமழிசையாழ்வாரை அந்த நரசிம்மவர்மன் நாடு கடத்தியிருக்கக்கூடும் என்பது பொருத்தமானது. இதனாலும், இந்த ஆழ்வார்கள் நால்வரும் நரசிம்மவர்மன் காலத்தில் கி.பி.7 ஆம்நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர் என்பது மேலும் உறுதியாகிறது.

திருமழிசையாழ்வாரைக் காஞ்சியிலிருந்து பல்லவ அரசன் நாடு கடத்தியதற்குக் காரணம் ஒன்று கூறப்படுகிறது. ஆழ்வாரின் சீடராகிய கணிகண்ணரை அரசன் தன்னைப் பாடும்படி கேட்டான் என்றும், அதற்குஅவர் மறுக்கவே அவன் அவரை நகரத்தைவிட்டுப் போகும்படி கட்டளையிட்டான் என்றும், அதனால் கணிகண்ணருடன் திருமழிசையாழ்வாரும்அவருடன் கோயிலிலிருந்த பெருமாளும் நகரத்தை விட்டுப் போய்விட்டார்கள் என்றும், பிறகு நகரத்தை விட்டுப் போய்விட்டார்கள் என்றும், பிறகு அரசன் அவர்களைத் திரும்பி வரும்படி கேட்டுக் கொண்டான் என்றும் கூறப்படுகிறது. இந்தக் காரணம் சரியென்று தோன்றவில்லை. வேறு காரணம் இருக்க வேண்டும். அக்காரணம் யாது?