| 334 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
இலங்கைப் போர் வரகுண பாண்டியன் இலங்கைத் தீவையும் வென்றான். இந்தச் செய்தியை, மகாவம்சம் என்னும் நூலின் பிற்பகுதியாகிய சூல வம்சத்தில் 50-வது அத்தியாயத்தில் காணலாம். அது கூறும் செய்தியின் சுருக்கம் இது: இலங்கையைச் சேனன் (முதலாம் சேனன்) என்னும் அரசன் ஆட்சி செய்த காலத்தில், பாண்டிய அரசன் இலங்கைமேல் படையெடுத்துச் சென்று அதன் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பிறகு, மகா தாளித கிராமம் என்னும் ஊரில் பாசறை தங்கினான். இலங்கையரசன், தன் சேனாபதியான பத்தன் என்பவன் தலைமையில் சேனையை அனுப்பிப் போர் செய்தான். பாண்டியன் சிங்களச் சேனையைச் சிதறடித்தான். ஆகவே, இலங்கை மன்னனாகிய சேனன், தலை நகரத்தைவிட்டுத் தெற்கே மலையநாட்டிற்குப் போய்விட்டான். பிறகு, சேனனுடைய தம்பியும் யுவராசனுமான மகிந்தன் என்பவன், பாண்டியனுடன் போர் செய்து இறந்தான். அதன் பிறகு, சேனனுடைய இளைய தம்பியான கஸ்ஸபன் என்பவனும் பாண்டியனுடன் போர் செய்து இறந்தான். கடைசியில், பாண்டியன் இலங்கையின் இராசதானியைக் கைப்பற்றிக் கொண்டு, அரண் மனையிலும் அபயகிரி விகாரை தூபாராம விகாரை முதலிய பௌத்தப் பள்ளிகளிலும் இருந்த பொன்னையும் பொருளையும் கவர்ந்து கொண்டான். தோல்வியுற்ற இலங்கை மன்னனாகிய சேனன், யானைகளையும் பொன்னையும் பொருளையும் பாண்டியனுக்குக் கொடுத்துச் சமாதானம் செய்து கொண்டான். இவற்றைப் பெற்றுக் கொண்டு பாண்டியன் தன் நாடு திரும்பினான். இந்தச் செய்தியைக் கூறுகிற சூல வம்சம் என்னும் நூல், இலங்கையின்மேல் படையெடுத்துச் சென்ற பாண்டியன் பெயரைக் கூறவில்லை. அப்பாண்டியன் வரகுண மகாராசன் என்பதை ஆராய்ச்சியினால் அறிகிறோம். வரகுண பாண்டியன், தானே நேரில் சென்று இலங்கையில் போர் செய்யவில்லை. இளவரசனாகிய தன் மகன் ஸ்ரீ மாறனை அனுப்பி அவன் மூலமாக இலங்கையை வென்றான். இதனால்தான், சின்னமனூர் செப்பேட்டுச் சாசனம், |