பக்கம் எண் :

364மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

சுந்தரமூர்த்தி சுவாமிகள், இவரை

“அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்”

என்று சிறப்பித்தார்.

சேரமாசிமாறர்

சோழ நாட்டில் திருவம்பர் என்னும் ஊரில் இருந்தவர்; பிராமணர். இவருடைய இயற் பெயர் மாறன் என்பது. சோமயாகம் செய்த படியினாலே சோமயாஜி என்னும் காரணப்பெயர் பெற்றார் என்றும், சோமயாஜி என்பது சோமாசி எனத் திரிந்தது என்றும் கூறுவர். சிவபெருமானிடத்தும் சைவ அடியாரிடத்தும் மிகுந்த அன்புள்ளவர். திருவாரூரில் இருந்த சுந்தரமூர்த்தி நாயனாரை அடைந்து, அவரிடத் தில் பக்தி செய்து கொண்டிருந்து கடைசியிலி சிவபதம் அடைந்தார்.

“நட்பரான் சோமாசி மாறனுக்கடியேன்”

என்று சுந்தரமூர்த்திகள் திருத்தொண்டத் தொகையில் இவரைப் பாராட்டியுள்ளார்.

பெருமிழலைக் குறும்பர்

மிழலை நாட்டில் பெருமிழலை என்னும் ஊரில் இருந்தவர். சிறந்த சிவபக்தியும் சைவ அடியார்களைப் போற்றிச் சிறப்புச் செய்யும் அடியார் தொண்டும் செய்து வந்தார். அன்றியும் யோகம் செய்யும் யோகியாகவும் இருந்தார். இவர், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் சிவ பக்தியை அறிந்து, அவரிடம் பக்திகொண்டு அவரைச் சிந்தித்து வணங்கி வந்தார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவஞ்சைக்களஞ் சென்றிருந்த போது, அவர் வெள்ளையானை ஏறித் திருக்கயிலாயஞ் செல்லப் போகிறதைப் பெருமிழலைக் குறும்பர், தமது யோக சக்தியால் முன்னமே யுணர்ந்தார். சுந்தரர் இவ்வுலகத்தை விட்டு நீங்குவதற்கு முன்பே, நானும் இவ்வுலகத்தைவிட்டு நீங்குவேன் என்று உறுதி செய்துகொண்டு, தமது யோக சக்தியால் உடலிலிருந்து உயிரைப் பிரித்துக் கொண்டு திருக்கயிலாயம் சென்றார்.