பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு41

பெற்றிருக்கிறது. இங்கு ஒரு நீர் ஊற்றுச் சுனையும் ஐந்து கற்படுக்கைகளும் காணப்படுகின்றன. இந்தக் கற்படுக்கைகள் கி.பி. முதல் நூற்றாண்டில் அமைக்கப்பட்டவை. இங்கு அக்காலத்தில் முனிவர்கள் தங்கித் தவம் செய்தனர் என்பது தெரிகிறது.

புன்னாடு

புன்னாடு, சங்க காலத்தில் வடகொங்கு நாட்டில் இருந்தது. இக்காலத்தில் இது மைசூர் இராச்சியத்தின் தெற்கில் ஹெக்கட தேவன தாலுகாவில் சேர்ந்திருக்கிறது. சங்க இலக்கியங்களிலே புன்னாடும் அதன் தலைநகரமான கட்டூரும் கூறப்படுகின்றன. காவிரி ஆற்றின் உப நதியாகிய கபிணி ஆற்றைச் சூழ்ந்து புன்னாடு இருந்தது. கபிணி ஆறு கப்பிணி என்றும் கூறப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உண்டாகிக் கிழக்குப் பக்கமாகப் பாய்ந்து (மைசூரில் நரசபூருக்கு அருகில்) காவிரியுடன் சேர்கிறது. பிற்காலத்தில் இது புன்னாடு ஆறாயிரம் என்று பெயர் பெற்றிருந்தது. சங்க காலத்தில் புன்னாட்டைச் சிற்றரசர் ஆண்டு வந்தனர். புன்னாட்டின் தலைநகரமான கட்டூர், கபிணி ஆற்றங்கரைமேல் அமைந்திருந்தது. பிற்காலத்தில் கட்டூர், கிட்டூர் என்று வழங்கப்பட்டது. அது, இன்னும் பிற்காலத்தில் கித்திபுரம் என்றும் பிறகு கீர்த்திபுரம் என்றும் வழங்கப்பட்டது.

புன்னாட்டில் அந்தக் காலத்திலேயே ஒரு வகையான நீலக்கல் கிடைத்தது. அந்தக் கற்கள் புன்னாட்டுச் சுரங்கத்திலிருந்து அகழ்ந் தெடுக்கப்பட்டன. நவரத்தினங்களில் ஒன்றான இந்தக் கல் அந்தக் காலத்தில் உலகத்திலேயே புன்னாட்டில் மட்டுந்தான் கிடைத்தது. அக்காலத்தில் பேர் பெற்றிருந்த உரோமாபுரி சாம்ராச்சியத்து மக்கள் இந்தக் கற்களை அதிகமாக விரும்பினார்கள். ஆகவே, தமிழ்நாட்டுக்கு வந்த யவன வாணிகர் இந்த நீலக் கற்களையும் பாண்டிநாட்டு முத்துக் களையும் சேரநாட்டு மிளகையும் வாங்கிக்கொண்டு போனார்கள். புன்னாட்டு நீலக்கற்களைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் ஒரு குறிப்பும் காணப்படவில்லை. ஆனால், மேல்நாட்டவரான தாலமி (Ptolemy) என்னும் யவனர் எழுதியுள்ள பூகோள நூலில் இதைப்பற்றிக் கூறியுள்ளார். ஸிடொஸ்தொமஸ் (Psedostomse) என்னும் இடத்துக்கும் பரிஸ் (Beris) என்னும் இடத்துக்கும் இடையே நீலக்கல் (Beryl) கிடைக்கிற பொவுன்னட (Pounnata) என்னும் ஊர் இருக்கிறது. என்று அவர் எழுதியுள்ளார். பொவுன்னட என்பது