440 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் கூறுகின்றார். “குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறை” என்று கூறியிருப்பது காண்க. நச்சரின்கதை பத்துப்பாட்டில் உள்ள மதுரைக் காஞ்சியில், “தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற் றொன்முது கடவுட் பின்னர் மேய வரைத்தா ழருவிப் பொருபபிற் பொருந” என வரும் அடிகட்கு, ஆசிரியர் நச்சினார்க்கினியர் பொருந்தாக் கதையொன்றைப் புனைந்துரைக்கிறார்: “இராவணனைத் தமிழ் நாட்டை யாளாதபடி போக்கின கிட்டுதற்கரிய வலியினையுடைய பழமை முதிர்ந்த அகத்தியன் பின்னே எண்ணப்பட்டுச் சான்றோனா யிருத்தற்கு மேவின ஒப்பற்றவனே” என்று உரை எழுதுகிறார். தென்னாட்டை இராவணன் ஆண்டான் என்றும், அகத்தியர் அவனுடன் இசைப்போர் செய்து வெற்றி கொண்டு அவனைத் தமிழ் நாட்டிற்கு அப்புறம் துரத்திவிட்டார் என்றும் இவ்வுரையாசிரியரே தொல்காப்பிய உரையில் எழுதுகிறார். இவர் கொள்கைப்படி, இராவணன் முதலில் தென்னாட்டை (தமிழ்நாட்டை) அரசாண்டான் என்றும், பிறகு இலங்கைக்குப் போய்விட்டான் என்றும் கருத வேண்டியிருக்கிறது. ஆனால், இவர் கூற்றுக்கு இவர் சான்று காட்டினார் இல்லை. எனவே, இது பிற்காலத்தில் இட்டுக்கட்டி வழங்கப்பட்ட கட்டுக்கதை எனக் கருத வேண்டும். வால்மீகி கூறுவது இராமாயணக் கதையே கட்டுக்கதை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. இராமாயணம் கட்டுக்கதையாயினும் ஆகுக; அன்றி, உண்மையில் நடைபெற்ற கதையாயினும் ஆகுக. இராமாயணத்தை முதன்முதல் வடமொழியில் இயற்றிய வால்மீகி முனிவர் கூறுகிற இலங்கை, அயோத்தி, கிஷ்கிந்தை முதலிய இடங்களெல்லாம் இந்தியாவில் ஒவ்வோரிடத்தில் இருந்த நிலப்பகுதிகள் என்பது மட்டும் உண்மையே. இதில் சிறிதும் ஐயமில்லை. நமது ஆராய்ச்சிக்கு இராமாயணத்தை உண்மைக் கதை என்றே கொள்வோம். அங்ஙனமாயின், சிங்களத் தீவு இராவணன் ஆண்ட இலங்கையா |