4. இலங்கையில் தமிழர்* சங்ககாலத்து இலங்கை நில அமைப்பு தமிழகத்துக்குத் தென்கிழக்கே, பாண்டி நாட்டுக்கு அருகிலே, இலங்கைத் தீவு இருக்கிறது. தமிழகத்துக்கு மிகச் சமீபத்திலே இருப்பதனாலே இலங்கைக்கும் தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு ஆதிகாலம் முதல் இருந்து வருகிறது. சமயத் தொடர்பும் வாணிகத் தொடர்பும் அக்காலத்தில் இருந்தன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இப்போது தனித் தீவாகப் பிரிந்திருக்கிற இலங்கை, தமிழகத்தோடு இணைந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தது. அந்தக் காலத்தில் கன்னியாகுமரிக்குத் தெற்கிலும் கிழக்கிலும் பாண்டி நாட்டோடு இணைந்திருந்த நிலம் இலங்கையோடு இணைந்து சேர்ந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தது. பின்னர்க் காலந்தோறும் ஏற்பட்ட கடல்கோள்களினாலே அந்த நிலப்பகுதி சிறிது சிறிதாக அரிக்கப்பட்டுத் தனித் தீவாகப் பிரிந்து இலங்கை என்று பெயர் பெற்றிருக்கிறது. அதன் பிறகு, குமரிமுனை யோடு இணைந்து இருந்த நிலப்பகுதி, அவ்வப்போது நிகழ்ந்த சில கடல்கோள்களினாலே சிறிது சிறிதாகக் கடலில் முழுகி இப்போதுள்ள நிலையையடைந்தது. தமிழ் நாட்டின் கரையோரங்களைச் சுற்றிலும் இலங்கைத் தீவின் கரையோரங்களைச் சுற்றிலும் இப்போதுள்ள கடல் ஆழமில்லாமல் இருக்கிறது. இந்தக் கடல் ஆழமில்லாமலிருப்பது, முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி நிலமாக இருந்து இலங்கையும் தமிழகமும் ஒன்றாக இணைந்திருந்தன என்பதற்குச் சான்றாக இருக்கிறது. சங்ககாலத்தில் இலங்கையில் இருந்த இடங்களை இனிப்பார்க்கலாம்:
தமிழ்நாடு - சங்க காலம் அரசியல் (1983) நூலில் உள்ள கட்டுரை. |