பக்கம் எண் :

50மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

மாந்தை

பூழி நாட்டில் மாந்தை என்னுந் துறைமுகப்பட்டினம் இருந்ததும், அது தொன்றுதொட்டுச் சேரருக்குரியதாக இருந்ததும் அறிந்தோம். துறைமுகப்பட்டினமாக இருந்த படியால் அங்கு அயல் நாட்டுக் கப்பல் வாணிகர் வந்து வாணிகம் செய்தார்கள். அதனால், சேரர்களுக்குச் சுங்க வருவாய் கிடைத்தது. இமயவர்மன் நெடுஞ்சேரலாதன் மாந்தைப் பட்டினத்தில் பொன் முதலான பெருஞ் செல்வத்தைப் புதைத்து வைத்திருந்தான் என்று மாமூலனார் கூறுகிறார்.

“வலம்படு முரசிற் சேரல் ஆதன்
முந்நீர் ஒட்டிக் கடம்பறுத் திமயத்து
முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து
நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்றவன்
நிலந் தினத் துறந்த நிதியம்”                      (அகம். 127 : 3 -10)

மாந்தைப் பட்டினம் மரந்தை என்றுங் கூறப்பட்டது.

“குரங்குகளைப் புரவிக் குட்டுவன்
  மரந்தை யன்ன என்நலம்”                     (அகம். 376 : 17 - 18)

எதுகை நோக்கி இவ்வாறு சில பதிப்புகளில் மரந்தை என்று கூறப்பட்டது. சில பதிப்புகளில் இது ‘ மாந்தை’ என்றே பதிப்பிக்கப்பட்டுள்ளது.

“குட்டுவன் ... .. ... .. கடல்கெழு மாந்தை”                      (நற். 395 :4- 9)

என்றும், ‘குட்டுவன் மாந்தை’ (குறுந். 34 :6) என்றும், ‘துறைகெழு மாந்தை’ (நற் 35: 7) என்றும் இது கூறப்படுகிறது. செல்வக்கடுங்கோ வாழியாதன், மாந்தரன் என்று கூறப்படுகின்றான். “பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல், நிறையருந் தானை வெல்போர் மாந்தரம், பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற, குறையோர் கொள்கலம்போல” (அகம். 142 : 3-6.) அவனுடைய பேரனான இளஞ்சேரல் இரும்பொறை ‘விறல்மாந்தரன் விறல் மருக’ என்று (9ஆம் பத்து 10 : 13) கூறப்படுகின்றான். இதனால், மாந்தைத் துறைமுகப்பட்டினம் செல்வக்கடுங்கோ வாழியாதன் காலத்தி லிருந்து கொங்குநாட்டுத் துறைமுகமாக இருந்தது என்று தெரிகின்றது.