54 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
இதில் கூறப்படுகிற நெடுமிடல் என்பது அதிகமான் அரசர்களில் ஒருவனுடைய பெயர் என்று பழைய உரையாசிரியர் கூறுகிறார். “நெடுமிடல் அஞ்சி இயற்பெயராம்” என்று உரையாசிரியர் தெளிவாகக் கூறுவது காண்க. பரணர், தம்முடைய செய்யுள் ஒன்றில் நெடுமிடலைக் கூறுகிறார். பதிற்றுப்பத்து கூறுகிற நெடுமிடல் அஞ்சியே இந்த நெடு மிடல் என்பதில் ஐயமில்லை. இந்த நெடுமிடல் பசும் பூண் பாண்டியனுடைய நண்பனாகவும் சேனைத் தலைவனாகவும் இருந்தான். பசும்பூண் பாண்டியனுடைய பகைவர்கள் சிலர், நெடுமிடலுடன் போர் செய்து அவனை வென்றார்கள் என்று பரணர் கூறுகிறார்.3 இந்த அதிகமான் நெடுமிடல் அஞ்சியும் பசும் பூண் பாண்டியனும் நண்பர்கள் என்பது அகம் 162 செய்யுளினால் தெரிகின்றது.4 (குறிப்பு:இந்தப் பசும்பூண் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாகிய பசும் பூண்செழியன் அல்லன்; இவனுக்கு முன்பு களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலின் காலத்திருந்தவன். இரண்டு பசும்பூண் பாண்டியரில் முதல் பசும்பூண் பாண்டியன் அதிகமான் நெடுமிடல் அஞ்சியின் காலத்திலிருந்தவன்.) பசும்பூண் பாண்டியன் துளுநாட்டு நன்னன்மேல் படையெடுத்துச் சென்றான். அவனுடைய படைக்குச் சேனாதிபதியாக இருந்தவன் அதிகமான் நெடுமிடல் அஞ்சி. துளு நாட்டு வாகைப் பறந்தலை என்னுமிடத்தில் துளு நாட்டுச் சேனாதிபதியாகிய மிஞிலிக்கும் நெடுமிடல் அஞ்சிக்கும் போர் நடந்தது. அந்தப் போரில் நெடுமிடல் அஞ்சி இறந்து போனான்.5 அதிகமான் நெடுமிடல் அஞ்சிக்குப் பிறகு தகடூர் நாட்டுக்கு அரசனானவன் அதிகமான் நெடுமான் அஞ்சி என்பவன். அதிகமான் நெடுமான் அஞ்சி ஒளவையாரை ஆதரித்தவன். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். ஒளவையார் இவனுடைய வீரத்தையும் வெற்றிகளையும் பாடியுள்ளார் (புறம். 87, 88 ,89, 90, 91, 92, 93, 94, 95, 97, 98, 315, 390). இவன் ஏழு அரசர்களோடு போர் செய்து வென்றதை ஒளவையார் கூறுகிறார்.6 இவன், மலையமான் திருமுடிக்காரியின் கோவலூரின் மேல் படையெடுத்துச் சென்று போரில் வென்றான் என்றும் அந்த வெற்றியைப் பரணர் புகழ்ந்து பாடினார் என்றும் |