72 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
பெயரையே சூட்டினான். சேர நாட்டுக் கருவூருக்கு வஞ்சி என்று வேறு ஒரு பெயர் இருந்தது போலவே இந்தக் கொங்கு நாட்டுக் கருவூருக்கும் வஞ்சி என்று வேறு ஒரு பெயர் இருந்தது.1 கோப்பெருஞ்சேரல் இரும்பொறை கருவூர் வேண்மாடத்தில், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவருடன் இருந்தபோது, சோழன் முடித்தலைக்கோ பெருநற்கிள்ளி அவ்வூர் வழியாக யானை மேல் வந்தான். அது கண்ட பெருஞ்சேரல் இரும்பொறை, சோழன் தன் மேல் போருக்கு வருகின்றானோ என்று ஐயங்கொண்டான். அப்போது அருகிலிருந்த சோழ நாட்டுப் புலவரான உறையூர் முடமோசியார், சோழன் போருக்கு வரவில்லை என்று கூறி இவனுடைய ஐயத்தை நீக்கினான் (புறம். 13). இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு “சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி கருவூரிடஞ் செல்வானைக் கண்டு சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறையொடு வேண்மாடத்து மேலிருந்து பாடியது” என்று கூறுகிறது. அந்துவஞ் சேரல் இரும்பொறையும் கருவூர் ஒள்வாட் பெருஞ் சேரல் இரும்பொறையும் ஒருவரே. இவர்கள் வெவ்வேறு அரசர் என்று கே.ஜி.சேஷ ஐயர் கருதுகிறார்.2 அவர் கருத்து தவறென்று தோன்றுகிறது. அந்துவன் பொறையனுடைய அரசியின் பெயர் பொறையன் பெருந்தேவி என்பது. அவள் ஒருதந்தை என்பவனின் மகள். இவர்களுக்குப் பிறந்த மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன். இதனை “மடியா வுள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த நெடுநுண் கேள்வி யந்துவற்கு ஒரு தந்தை யீன்றமகள் பொறையன் பெருந்தேவி யீன்றமகன் ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. செல்வக் கடுங்கோ வாழியாதன்” என்னும் 7ஆம் பத்துப் பதிகத்தினால் அறிகிறோம். (‘இதன் பதிகத்து ஒருதந்தை யென்றது பொறையன் பெருந் தேவியின் பிதாவுடைய பெயர்’ என்று பழைய உரை கூறுகிறது.) சேர அரசரின் இளையபரம்பரையைச் சேர்ந்த அந்துவன் பொறையன் கொங்கு இராச்சியத்தை அமைத்தான். |