பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு91

இந்தச் செய்யுளில் பொறையன் என்பது பெருஞ்சேரல் இரும் பொறையை. நும்பி என்றது அவனுடைய தம்பியாகிய குட்டுவன் இரும்பொறையை, இதனால், தகடூர்ப் போர்நிகழ்ந்த காலத்தில் எக்காரணம் பற்றியோ இவ்விருவருக்கும் பிணக்கு ஏற்பட்டிருந்தது என்பதும் அப்பிணக்கைப் புலவர் தீர்க்க முயன்றனர் என்பதும் தெரிகின்றன.

பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் குட்டுவன் இரும் பொறை என்று ஒரு தம்பி இருந்ததையறியாதவர், தகடூர் மன்னனாகிய அதிகமான் நெடுமான் அஞ்சி. பெருஞ்சேரல் இரும்பொறைக்குத் தம்பி முறையுள்ளவன் என்றும் இச் செய்யுளில்‘நும்பி’ என்றது அதிகமான் நெடுமான் அஞ்சியைக் குறிக்கிறது என்றும் கூறுவர். அதிகமான் நெடுமான் அஞ்சிக்கும் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் யாதொரு உறவும் இல்லை. சேரமன்னருக்கும் தகடூர் மன்னருக்கும் அக்காலத்தில் உறவு முறை கிடையாது. புறத்திரட்டுப் பதிப்பாசிரியராகிய வையாபுரிப் பிள்ளை அவர்கள், இச்செய்யுளில் வருகிற நும்பி என்பதைச் சுட்டி காட்டி இதற்கு இவ்வாறு விளக்கம் எழுதுகிறார்.

“புறத்திரட்டில் வரும் செய்யுளொன்றால் (புறத். 776) சேர மானுக்கு அதிகமான் என்பவன் தம்பி முறையினன் என்பது பெறப் படுகின்றது. ஆகவே தகடூர் யாத்திரைச் சரித்திரம் பாரதம் போன்று தாயத்தாரிடை நிகழ்ந்த போரின் வரலாற்றினை விளங்கக் கூறுவதாம்.”2

பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் குட்டுவன் இரும்பொறை என்னும் உடன் பிறந்த தம்பி ஒருவன் இருந்தான் என்பதையறியாதபடியால், இவர் ‘நும்பி’ என்பதற்கு அதிகமான் என்று பொருள் கொண்டார். இது தவறு. நும்பி என்றது குட்டுவன் இரும்பொறையைக் குறிக்கிறது.

தகடூர் யாத்திரைச் செய்யுள் இன்னொன்றிலும் இந்தத் தமயன் தம்பியர் குறிக்கப்படுகின்றனர். புறத்திரட்டு 785ஆம் செய்யுளில் (தகடூர் யாத்திரைச் செய்யுள் ) இவர்கள் இவ்வாறு குறிக்கப்படுகின்றனர். அச்செய்யுட் பகுதி இது:

“நும்மூர்க்கு
நீதுணை யாகலு முளையே நோதக
முன்னவை வரூஉங் காலை நும்முன்
நுமக்குத் துணை யாகலும் உரியன்; அதனால்
தொடங்க வுரிய வினைபெரி தாயினும்
அடங்கல் வேண்டுமதி.”