பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு93

இளஞ்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர்க் கிழார் 9ஆம் பத்துப் பாடினார். ‘பாடிப்பெற்ற பரிசில்’ “ மருளில் லார்க்கு மருளக் கொடுக்க வென்று உவகையின் முப்பத்தீராயிரங் காணம் கொடுத்து அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் காப்புமறம் தான் விட்டான் அக்கோ” (9ஆம் பத்துப் பதிகக் குறிப்பு).

இளஞ்சேரல் இரும்பொறை போரில் வெற்றி பெற்றான் என்று பெருங்குன்றூர்கிழார் கூறுகிறார். எந்தப் போரை வென்றான் என்பதைக் கூறவில்லை. இவனுடைய முன்னோர்கள் வென்ற போர்களைச் சிறப்பித்துக் கூறி அவர்களின் வழிவந்த புகழையுடையவன் என்று கூறுகிறார். ‘காஞ்சி சான்ற செருப்பல’ செய்தான் என்று கூறுகிறார். இவன், ‘சென்னியர் பெருமான்’ (சோழன்) உடன் போர் செய்தான் என்றும் அப்போரில் சோழன் தோற்றுப் போனான் என்றும் கூறுகிறார் (9ஆம் பத்து 5) “பொன்னவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண், ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்.” இந்தச் சென்னியர் பெருமான், செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இளஞ்சேரல் இரும்பொறை தன்னுடைய முன்னோர் களைப் போலவே கொங்கு நாடு முழுவதும் அரசாண்டான். பூழியர்கோ கொங்கர்கோ, தொண்டியர் பொருநன், குட்டுவர் ஏறு, பூழியர் மெய்ம் மறை, மாந்தையோர் பொருநன், கட்டூர் வேந்து என்றும், கொங்கு நாட்டில் பாயும் ‘வானி நீரினும் தீந்தண் சாயலன் என்று கூறப் படுகிறான். 9ஆம் பத்தில் இவன் பலமுறை ‘வல்வேற் குட்டுவன்’, ‘வென்வேற் பொறையன்’, ‘பல்வேல் இரும்பொறை’ என்று கூறப் படுகிறான். 9ஆம் பத்தின் பதிகத்தில் இவன் ‘விச்சியின் ஐந்தெயிலை’ எறிந்தான் என்றும் அப்போரில் சோழ, பாண்டியர் தோற்றனர் என்றும் கூறப்படுகிறான். மற்றும் “பொத்தியாண்ட பெருஞ் சோழனையும் வித்தையாண்ட இளம் பழையன் மாறனையும்” வென்றான் என்று கூறப்படுகிறான்.

அடிக்குறிப்புகள்

1.P. 506, 567, 526, 540. A Comprehensive History of India Vol. II Edited by K.A. Nelakanta Sastri 1957.

2.பக்கம் XIV - XIVI புறத்திரட்டு. ராவ்சாகிப் S. வையாபுரிப்பிள்ளை பதிப்பு 1939.