பக்கம் எண் :

116மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 3

என்பது பன்னிருபாட்டியல்.

உலக வாழ்க்கையில் பெறவேண்டிய அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் கீழ்க்கணக்கு என்று கூறப்பட்டதைக் கண்டோம். இனி, களப்பிரர் காலத்தில் எழுதப்பட்ட கீழ்க்கணக்கு நூல்களைக் கூறுவோம்.

நான்மணிக்கடிகை

இது 104 செய்யுட்களையுடையது. விளம்பிநாகனார் என்பவரால் செய்யப்பட்டது. இப்பெயரைக் கொண்டு இவர் விளம்பி என்னும் ஊரில் இருந்தவர் என்பது தெரிகிறது. ஒவ்வொரு வெண்பாவிலும் நான்கு நான்கு நீதிகளைக் கூறுகிறபடியால் நான்மணிக்கடிகை என்று பெயர் பெற்றது. இவர் வைணவ சமயத்தவர் என்பது இந்நூல் கடவுள் வாழ்த்தினால் அறிகிறோம்.

மதிமன்னு மாயவன் வாண்முகம் ஒக்கும்
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்
முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர் மற்றவன் கண்ணொக்கும் பூவைப்
புதுமலர் ஒக்கும் நிறம்

என்பது இந்நூலின் கடவுள் வாழ்த்து.

இன்னா நாற்பது

இன்னாதவைகளைத் (துன்பந்தருகிற செயல்களை) தொகுத்துக் கூறுகிறபடியால் இந்நூல் இன்னாநாற்பது என்று பெயர்பெற்றது. நாற்பது வெண்பாக்களையுடையது. தனியாகக் கடவுள் வாழ்த்து ஒன்றைப் பெற்றுள்ளது. சிவபெருமான், பலராமன், மாயவன் (திருமால்), சத்தியான் (வேலாயுதனாகிய முருகன்) ஆகியோரைக் கடவுள் வாழ்த்தில் இதன் ஆசிரியர் கூறுகிறார்.

முக்கட் பகவன் அடிதொழாதார்க் கின்னா
பொற்பனை வெள்ளையை யுள்ளாது ஒழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா ஆங்கின்னா
சத்தியான் தாள்தொழா தார்க்கு

என்பது இந்நூல் கடவுள் வாழ்த்து.

இதன் ஆசிரியர் பெயர் கபிலர். இந்த ஆசிரியரும் முன்பு கூறப் பட்ட கபிலதேவநாயனார் என்பவரும் ஒருவரே. இந்தக் கபிலர் (கபில