140 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 3 |
நான்கு கணங்களிலே நந்திகணம் பேர்போனது. வச்சிர நந்தி ஆசாரியர் நந்திகணத்தை இரண்டாகப் பிரித்தார். புதிய பிரிவுக்குத் திராவிடகணம் (தமிழசங்கம்) என்று பெயர் இட்டு அதனை மதுரையில் அமைத்து நிறுவினார். இது கி.பி. 470 இல் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் நடந்தது. இதுதான் வச்சிரநந்தி அமைத்த திரமிள சங்கம். இந்தத் திரமிள சங்கத்தில் சைன சமயத் துறவிகள் மட்டுமே இருந்தார்கள். இவர்களுடைய வேலை, முன்னமே சொல்லியதுபோல சைன சமயத்தைப் பரப்பியதாகும். வச்சிரநந்தியின் தமிழ்ச் சங்கம் கி.பி. 470இல் நிறுவப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர் எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், பழங்கால இந்திய வரலாற்றுக்குச் சைன மூலங்கள் என்னும் நூலை எழுதிய ஜியோதி பிரசாத் ஜெயின், வச்சிரநந்தி திராவிட சங்கத்தை அமைத்தது கி.பி 604ஆம் ஆண்டு என்று கூறுகிறார் (Jyoti Prasad Jain, The Jaina Sources of the History of Ancient India (100 B.C- 900 A.D.) 1964, pp. 160, 167). இவர் கூறுவது தவறு. விக்கிரம ஆண்டு 526 என்பதை சாலிவாகன ஆண்டு 526 என்று கணக்கிடுவதால் இவர் தவறுபடுகிறார். விக்கிரம ஆண்டு 526 என்பது கி.பி. 470 அல்லது 496 ஆகும். சாலி வாகன சகம் 526 என்று கணக்கிட்டால் அது. கி.பி.604 ஆகிறது. வச்சிர நந்தி விக்கிரம ஆண்டு 526இல் (கி.பி.470) மதுரையில் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார் என்பதே சரியாகும். களப்பிரர் ஆட்சி ஏறத்தாழ கி.பி. 575இல் முடிந்து விட்டது. களப்பிரர் ஆட்சிக்குப் பிறகு கி.பி. 604 இல் வச்சிரநந்தி மதுரை யில் தமிழ்ச் சங்கம் நிறுவியிருக்க முடியாது. எனவே, வச்சிரநந்தி கி.பி 470 இல் திராவிட சங்கத்தை நிறுவினார் என்பதே சரி எனத் தோன்றுகிறது. முற்காலத்தில் பாண்டியர் மதுரையில் மொழி வளர்ச்சிக்காக அமைத்த சங்கம் வேறு, பிற்காலத்தில் சைன சமய வளர்ச்சிக்காக வச்சிர நந்தி ஆசாரியர் ஏற்படுத்திய சங்கம் வேறு. வெவ்வேறான இரண்டு சங்கங்களையும் ஒன்று எனக் கருதுவது தவறு. திரு. பி.தி. சீனிவாச அய்யங்கார் தமிழர் வரலாறு என்னும் நூலில் இது பற்றித் தெளிவாக வும் சரியாகவும் எழுதியுள்ளார். “இது (வச்சிரநந்தியின் திரமிள சங்கம்) நாம் அறிந்துள்ள தமிழ்ச் சங்கம் (பாண்டியரின் தமிழ்ச் சங்கம்) அன்று; சாதாரண மக்களுக்கு சைன மதத்தைப் போதிப்பதற்காகத் தமிழ்நாட்டில் சைன சமயத்தாரால் அமைக்கப்பட்ட ஒரு நிறுவனம் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்” என்று அவர் எழுதியுள்ளார் (P.T. Srinivasa Iyangar, History of the Tamils, 1929,p. 247). |