பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு | 189 |
மங்கல மடந்தை கோட்டத் தாங்கண் செங்கோட் டுயர்வரை சேணுயர் சிலம்பில் (சிலம்பு,வரந்தரு. 153- 154) (இதில் மங்கல மடந்தை என்பதற்கு மங்கல தேவி என்று அரும்பத வுரையாசிரியர் உரை எழுதுவது காண்க. இதன் அடிக்குறிப்பில் சிலப்பதிகாரப் பதிப்பாசிரியராகிய டாக்டர் உ.வே. சாமிநாதையர், “மங்கலா தேவி என்றது, கண்ணகியை; மங்கலாபுரம் அல்லது மங்களூர் என்பது இத்தேவி காரணமாக வந்த பெயர்” என்று குறிப்பு எழுதியிருப்பது தவறு என்பது சொல்லாமலே தெரிகிறது. இதுபற்றி இங்கு விளக்கம் தேவையில்லை.) மங்கலாதேவியின் கோட்டத்துக்கு அருகில் இருந்ததாகச் சிலம்பு கூறுகிற ‘ செங்கோட்டுயர் வரை சேணுயர்சிலம்பு’ கதிரிக்கு அருகில் உள்ள மலையாகும். இங்குப் பௌத்த முனிவர் தங்கியிருந்த இயற்கைக் குகைகள் இருந்தன என்று முன்னமே கூறினோம். இங்குள்ள சுனைகளில் வெள்ளைக்கடுகு போன்ற கற்களும் முருக்கம்பூ நிறம் போன்ற சிறுகற்களும் இருந்தன என்றும் மாவைக் கரைத்தது போன்ற நீர் இங்கு இருந்தது என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. மங்கல மடந்தை கோட்டகத் தாங்கண் செங்கோட் டுயர்வரைச் சேணுயர் சிலம்பில் பிணிமுக நெடுங்கல் பிடர்ச்சிலை நிரம்பிய அணிகயம் பலவுள. ஆங்கவை யிடையது கடிப்பகை நுண்கலும் கவிரிதழ்க் குறுங்கலும் இடிக்கலப் பன்ன இழைந்துகு நீரும் உண்டோர் சுனை அதனுள்புக் காடினர் பண்டைப் பிறவியர் ஆகுவர் (சிலம்பு, வரந்தரு. 53- 60) (கடிப்பகை நுண்கல் - வெண்சிறு கடுகு போன்ற நுண்ணியல் கல். கவிர் இதழ்க் குறுங்கல் - முருக்கம்பூப் போன்ற நிறத்தையுடைய குறிய கல். இடிக் கலப்பன்ன - மாவைக் கரைத்தா லொத்த. அரும்புதவுரை.) சங்க இலக்கியங்களிலிருந்து அறியப்படுகிற துளுநாட்டு ஊர்களையும் இடங்களையும் இதுகாறும் அறிந்தோம். இனி, சங்க இலக்கியங்களிலிருந்து அறியப்படுகிற நன்ன அரசருடைய வரலாற்றைப் பார்ப்போம். |