I. சத்தியபுத்திர நாடு தேவனாம் பிரியன் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்டிருந்த அசோகச் சக்கரவர்த்தி பாரத நாட்டைக் கி.மு.275-234 வரையில் அரசாண்டார். இவருடைய இராச்சியத்தில், தெற்கே இருந்த தமிழகம் அடங்கவில்லை என்பதுஇவருடைய சாசனங்களிலிருந்து தெரிகின்றது. அசோகச் சக்கரவர்த்தியுடைய இரண்டாவது, பதின் மூன்றாவது சாசனங்கள் (Rock Edicts II and XIII) இச்செய்தியைத் திட்டவட்டமாகக் கூறுகின்றன. சோழ பாண்டிய சத்தியபுத்திர கேரளபுத்திர தம்பபாணி (இலங்கை) ஆகிய நாடுகள் அசோகச் சக்கரவர்த்தியின் ஆட்சிக்குட் பட்டவையல்ல என்பது இச்சாசனங்களினால் தெரிகின்றது. பிராகிருத மொழியில் பிராமி எழுத்தினால் எழுதப்பட்ட இந்தச் சாசனங்களில் வாசகம், சோடா பாடா ஸதியபுதொ கேத புதோ ஆ தம்ப பம்ணி என்று எழுதப் பட்டிருக்கிறது. அதாவது, சோழ பாண்டிய சத்தியபுத்திர கேரள புத்திர தம்பபாணி நாடுகள் என்பது இதன் பொருள், கேரளபுத்திர நாடு என்பது சேர நாட்டைக் குறிக்கிறது. சத்திய புத்திர நாடு என்பது துளு நாட்டைக் குறிக்கிறது. சத்திய புத்திர நாடு என்று அசோகச் சக்கரவர்த்தியின் சாசனம் கூறுவது துளுநாடு என்று கருதப்பட்டாலும் வேறு சில ஆராய்ச்சிக் காரர்கள் வேறு கருத்தைத் தெரிவிக்கிறார்கள். அதிகமான் அரசர் ஆண்ட தகடூர், சத்தியபுத்திர நாடு என்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சத்திய மங்கலம் தாலுகாவே சத்தியபுத்திரநாடு என்றும், சத்தியவிரத க்ஷேத்திரம் என்று பெயர் பெற்ற காஞ்சிபுரமே சத்தியபுத்திரநாடு என்றும் வெவ்வேறு கருத்தைத் தெரிவித்துள்ளனர். ‘வாய்மொழிக் கோசர்’ இருந்த துளு நாடே சத்தியபுத்திர நாடு என்பது இந்நூலாசிரிய ருடைய கருத்து. இதுபற்றி எழுதப்பட்டுள்ள கருத்துகளை வாசகரின் ஆராய்ச்சிக் காகக் கீழே தருகிறேன். |