பக்கம் எண் :

232மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 3

கடற்கரைக்கு அருகில் இருந்ததென்றும் மருதன் இளநாகனார் கூறுகிற இச்செய்தி கேரள நாட்டாரும் துளு நாட்டாரும் அறியாத ஓர் புதிய அரிய செய்தியாகும்.

இந்தச் செல்லூர் மேற்குக் கடற்கரையோரத்தில் துளு நாட்டில் இருந்தது. பின்னத்தூர் திரு. அ. நாராயணசாமி ஐயர் அவர்கள், இச் செல்லூர், கிழக்குக் கடற்கரை யோரத்தில் சோழ நாட்டில் இருந்ததென்று கூறுகிறார். ஐயர் அவர்கள் தாம் உரை எழுதி அச்சிட்ட நற்றிணைப் பதிப்பிலே பாடினோர் வரலாற் றிலே ‘மதுரை மருதன் இளநாகனார்’ என்னுந் தலைப்பிலே இவ்வாறு எழுதுகிறார்.

“திருவழுந்தூர்த் திதியனுக்குரிய செல்லூரில் பரசுராம முனி வேள்வி செய்தது கூறுவதுடன் தழும்பனது ஊணூரும் சாயாவனமும் (திருச்சாய்க்காடு) இவராற் கூறப்பட்டுள்ளன.”

இவ்வாறு இவர் கூறுவது தவறு திதியன் என்பவனுக்குச் செல்லூர் உரியதென்று சங்க இலக்கியத்தில் எங்குமே கூறப்படவில்லை. ஐயரவர்கள், சோழ நாட்டிலிருந்த திதியனுக்குச் செல்லூர் உரியதென்று கூறுவது புதுமையாக இருக்கிறது. எனவே இவர் செல்லூர் சோழநாட்டி லிருந்ததாகக் கருதுவது தவறானது. இந்தச் செல்லூர், துளு நாட்டிலே மேற்குக் கடற்கரைப் பக்கமாக இருந்ததும் கோசர் என்னும் இனத்தார் வாழ்ந்திருந்ததுமான ஊர்.

கந்தபுராணம் சஃயாத்திரி காண்டத்திலும் வேறு வடமொழிப் புராணங்களிலும் மேற்குக் கடற்கரையுடன் பரசுராமனைத் தொடர்பு படுத்திக் கூறியுள்ளது. துளுநாட்டுச் சேரநாட்டுச் செவிவழிச் செய்தி களும் பரசுராமனை மேற்குக் கடற்கரை நாடுகளுடன் தொடர்புபடுத்திக் கூறுகின்றன. எனவே, மருதன் இளநாகனார் கூறுகிற பரசுராமன் யாகஞ் செய்த செல்லூர் துளு நாட்டுச் செல்லூரே என்பதில் சிறிதும் ஐயமில்லை.

கேரள நாட்டில் முப்பத்திரண்டு கிராமங்களையும் துளுநாட்டில் முப்பத்திரண்டு கிராமங்களையும் பரசுராமன் உண்டாக்கி அக்கிராமங் களைப் பிராமணருக்குத் தானஞ் செய்தான் என்னும் கதை, பிற்காலத் தில் நம்பூதிரிப் பிரமாணர் செல்வாக்கும் ஆதிக்கமும் பெற்ற கி.பி. 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏற்பட்ட கதை என்று தோன்றுகிறது. பரசு ராமனைப் பற்றிய இக்கதைகள் பிற்காலத்தில் தோன்றியவை.