238 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 3 |
சிற்றரசன்தானே. நெடுந் தொலைவிலிருந்த மோரியருக்கும் தென் கோடியிலிருந்த மோகூருக்கும் என்ன பகை? இதில் ஏதோ தவறு இருக்கும் போலத் தோன்றுகின்றது. மோகூர் என்னும் சொல்லில் பிழை இருக்கிறது போலத் தோன்றுகிறது. மோகர் என்று இருக்கவேண்டிய சொல் மோகூர் என்று தவறாக எழுதப்பட்டது என்று தோன்றுகிறது. இது பிற்காலத்தில் ஏடெழுதுவோரால் நிகழ்ந்த பிழை என்று தோன்றுகிறது. ‘மோகர் பணியாமையின்’ என்றிருக்க வேண்டிய வாசகம்‘ மோகூர் பணியாமையின்’ என்று பிற்காலத்தில் தவறாக எழுதப்பட்டும் படிக்கப்பட்டும் வந்தது என்று தோன்றுகிறது. மோகர் என்பவர் கொங்கண (துளு) நாட்டின் கடற்கரைப் பக்கத்தில் இருந்த போர்ப்பிரியமுள்ள மீன்பிடிக்குந் தொழில் செய்த மக்கள். அவர்களுடைய சந்ததியார் துளு நாட்டுக் கடற்கரைப் பக்கத்தில் இன்றும் மோகர், என்னும் பெயருடன் இருக்கிறார்கள். அந்த மோகர் போர் விருப்பமும் அஞ்சாமையுமுடையவராக இருந்த படியால் கோசருக்கு அடங்கமாலிருந்தனர். அவர்கள் பணிந்து போகாதபடியால் அவர்களைப் பணியச் செய் வதற்காகக் கோசர், மோரியருடைய உதவியை வேண்டினார்கள். ஆகவே, மோகரை அடக்குவதற்காக மோரியர் படையெடுத்து வந்தார்கள். துளு நாட்டுக் கடற்கரையோரத்தில் வசித்திருந்த மோகர் மேல் போர் செய்ய வந்த மோரியர், துளு நாட்டுக்கு அப்பால் இருந்து வந்தபடியால், அவர்கள் இடையில் இருந்த உயரமான மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து துளு நாட்டுக்குள் செல்ல வேண்டியவ ராயினர். மலையிலே கணவாய்கள் இல்லாதபடியாலும் கடல் மட்டத்துக்குமேல் 3000அடி முதல் 6000அடி வரையில் உயர்ந்திருக்கிற மேற்குத் தொடர்ச்சி மலைகளைத் கடக்கவேண்டியிருந்தபடியாலும் மோரியர் மலைமேல் ஏறிச்செல்வதைத் தவிர வேறுவழியில்லை. அக் காலத்தில் மனிதர் நடந்து செல்லக்கூடிய ஒற்றையடிப் பாதை (காலடிப் பாதை) தவிர வண்டிகள் செல்வதற்கு அகலமாக பாதைகள் மலைமேல் இல்லை. மோரியர் தேர்ப் படையுடன் வந்தபடியால், மலை வழியில் உள்ள ஒற்றையடிப் பாதைகள் அவர்களின் தேர்கள் செல்வதற்குப் பயன்படவில்லை. ஆகவே, வண்டிகளும் தேர்களும் செல்வதற்குரிய அகலமான பாதையை அமைக்க வேண்டியிருந்தது. |