பக்கம் எண் :

74மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 3

“அளவரிய ஆதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ர னென்னுங் கலி அரைசன் கைக்கொண்டதனை இறக்கிய பின் படுகடன் முளைத்த பரிதிபோல பாண்ட்யாதி ராஜன் வெளிற்பட்டு விடுகதி ரவிரொளி விலக வீற்றிருந்து வேலை சூழ்ந்தவியலிடத்துக் கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச் செங்கோலோச்சி வெண்குடை நீழற் றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப் பிறர்பாலுரிமை திறவிதி நீக்கித் தன்பா லுரிமை நன்கனமமைத்த மானம் பேர்த்த தானைவேந்தன் னொடுங்கா மன்னரொளி நகரழித்த கடுங்கோ னென்னுங் கதிர்வேற்றென்னான்” என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது (வேள்விக்குடிச் செப்பேடு, வரி 39-46).

“கற்றறிந்தோர் திறல் பரவக் களப்பாழரைக் களைகட்ட மற்றிரண் டோள் மாக்கடுங்கோன் மானம் பேர்த்தருளிய கோன்” என்று தளவாய்ப் புரச் செப்பேடு கூறுகிறது (தளவாய்புரச் செப்பேடு, வரி 131-132).

பாண்டியன் கடுங்கோன், ‘மானம் பேர்த்த தானை வேந்தன்’ என்றும் ‘ மானம் பேர்த்தருளிய கோன்’ என்றும் செப்பேடுகளின் தமிழ் வாசகம் கூறுவதைப்போலவே, சமஸ்கிருதச் சுலோகமும் அவனை மானம் பேர்த்த கடுங்கோன் என்று கூறுகிறது (தளவாய்புரச் செப்பேடு, சுலோகம் 23, வரி 39-40) எனவே ‘மானம் பேர்த்த கடுங்கோன்’ என்பது அவனுடைய சிறப்புப் பெயர் என்று தோன்றுகிறது.

பாண்டியன் கடுங்கோன் பாண்டிய நாட்டைக் களப்பிரரிடமிருந்து மீட்டுக்கொண்டபோது, ஏறக்குறைய அதே காலத்தில் தொண்டை நாட்டு அரசனான பல்லவ சிம்மவிஷ்ணு சோழ நாட்டைக் களப்பிரரிட மிருந்து கைப்பற்றிக்கொண்டான். இந்த வரலாற்றைப் பள்ளன்கோவில் செப்பேடும் வேலூர்ப் பாளையம் செப்பேடும் கூறுகின்றன.

“சிம்மவர்மனுடைய மகன் சிம்மவிஷ்ணு. அந்தச் சிம்மவிஷ்ணு, மற்றொரு சிம்மவிஷ்ணு என்னும் அரசனை வென்றான். அவன், பலத்தில் வெற்றி வீரனாகிய அர்ச்சுனனைப் போன்றவன். வில் வித்தை யிலும் வீரன். போரிலே வெற்றி கொள்வதில் சமர்த்தன்” என்றும்,

“உண்மை ‘ தியாகம்’ வணக்கம் போன்ற பரிசுத்தமான நற்குணங் கள் யாரிடத்தில் உள்ளனவோ, வீர குணங்கள் யாரை அடைக்கலமாகக் கொண்டுள்ளனவோ, (அந்தச் சிம்மவிஷ்ணு) கவேரன் மகளான காவிரி ஆற்றை மாலையாகவும் செழுமையான நெல் வயல், கரும்பு வயல்களை ஆடையாகவும் கமுகத் தோட்டம், வாழைத்