பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு103

ஊருக்குத் திரும்பிப் போனாள். அங்கு அவள் ஆண் குழந்தையைப் பெற் றெடுத்து, அக்குழந்தையை மணிபல்லவத் துறையில் வந்து தங்கின கம்பலச் செட்டி என்னும் கப்பல் வாணிகனிடம் கொடுத்து அக் குழந்தையைச் சோழனிடம் சேர்க்கும்படி அனுப்பினாள். கம்பலச் செட்டி குழந்தையுடன் கப்பலில் புறப்பட்டுக் காவிரிப் பூம்பட்டினத்துக்கு வந்தபோது இடைக்கடலில் கப்பல் கவிழ்ந்து குழந்தை இறந்து போயிற்று (மணி 25 : 178 - 192) சோழ நாட்டிலிருந்து சாவக நாட்டுக்குச் சென்ற மணிமேகலை சாவக நாட்டு அரசன் புண்ணியராசனைக் கண்டு அவனோடு புறப்பட்டு மணிபல்லவத்துக்கு வந்து அங்கிருந்த புத்தபாத பீடிகையை வணங்கினாள் (மணி 25 : 120 - 127). இலங்கையிலிருந்து சோழநாட்டுக்கும் காஞ்சிபுரத்துக்கும் வந்த பௌத்த பிக்குகள் ஜம்பு கொல பட்டினத்திலிருந்து கப்பலேறி வந்தார்கள். இவ்வாறு எல்லாம் பழைய நூல்களில் மணி பல்லவ - ஜம்புகொல பட்டினம் கூறப்படுகின்றது.

மாதிட்டை

இது இலங்கையின் மேற்குக் கரையில் மன்னார் குடாக் கடலில் பாண்டி நாட்டுக்கு எதிர்க்கரையிலிருந்த பேர் போன பழைய துறை முகப்பட்டினம். மாதிட்டை என்பது மகாதிட்டை என்றுங் கூறப்பட்டது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கையை யரசாண்ட முதல் சிங்கள அரசனான விசயன், பாண்டியன் மகளை மணஞ்செய்து கொண்டான். அவனுடைய எழுநூறு தோழர்களும் பாண்டி நாட்டில் பெண் கொண்டு திருமணஞ் செய்து கொண்டார்கள். மணமகளிர் பாண்டி நாட்டிலிருந்து இலங்கைக்குக் கப்பலில் சென்ற போது அவர்களும் அவர்களுடன் சென்ற பரிவாரங்களும் பதினெட்டு வகையான தொழில்களைச் செய்தவர்களின் குடும்பங்களும் மாதிட்டைத் துறைமுகத் தில் இறங்கிச் சென்றார்கள் என்று மகாவம்சம் கூறுகின்றது. (மகாவம்சம் VII : 58) கி.மு. முதல் நூற்றாண்டில் இலங்கை யரசாண்ட சோழ நாட்டுத் தமிழனாகிய ஏலேலன் (ஏலாரன்) மீது துட்டகமுனு என்னும் அரசன் இலங்கையில் போர் செய்த போது ஏலேலனுக்கு உதவியாகச் சோழ நாட்டிலிருந்து படை திரட்டிக் கொண்டுபோன பல்லுகன் என்னும் அரசன் மாதிட்டைத் துறைமுகத்தில் இறங்கினான். (மகாவம்சம் XXV : 80) வட்டகாமணி அரசன் (கி.மு. 44-29) இலங்கையை யரசாண்ட போது ஏழு தமிழ்நாட்டு வீரர்கள் படையெடுத்துச் சென்று இலங்கையில் போர் செய்தார்கள்.