பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு123

‘நெல்லும் உப்பும் நேரே, ஊரீர்
கொள்ளீரோ வெனச் சேரிதொறும் நுவலும்’                    (அகம், 390 : 8-9)

(சேரி - தெரு. நுவலும் - சொல்லும்)

‘கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எவ்வளை தெளிர்ப்ப வீசி,
நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்
சேரிவிலைமாறு கூறலின்’                    (அகம், 140 : 5-8)

ஆறுகளும் கால்வாய்களும் உள்ள ஊர்களில் படகுகளில் உப்பை ஏற்றிக் கொண்டு போய் விற்றார்கள். உப்பை நெல்லுக்கு மாற்றி அந்த நெல்லைப் படகில் ஏற்றிக் கொண்டு போனார்கள் என்று கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகின்றார்.

‘கொழும் பல்குடிச் செழும்பாக்கத்துத்
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு
வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
நெல்லோடு வந்த வல்வாய்ப் பஃறி
பணை நிலைப் புரவியின் அணைமுதற்பிணிக்கும்
கழிசூழ் படப்பை’                    (பட்டினப்பாலை, 27-32)

மாட்டுவண்டிகள் போகமுடியாத பாறைகளும் மலைகளும் மேடுகளும் உள்ள ஊர்களுக்கு உப்பு மூட்டைகளைக் கழுதை மேல் ஏற்றிக் கொண்டு போய் விற்றார்கள். அவர்கள் கூட்டமாகச் சேர்ந்து நல்ல நிமித்தம் பார்த்து வீரர்களையும் அழைத்துக் கொண்டு மலைநாடு களுக்குப் போனார்கள். கொள்ளைக்காரர் இடைவழியில் வந்து கொள்ளையிடுவதும் உண்டு. ஆகையினால் அவர்கள் தங்களுடன் வீரர்களை அழைத்துக் கொண்டு போனார்கள்.

‘அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்குதிறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம்
குடபுல மருங்கின் உய்ம்மார் புள்ளோர்த்துப்
படையமைத் தெழுந்த பெருஞ்செய் ஆடவர்
நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதைக்
குறைக்குளம்பு தைத்த கற்பிறழ் இயவு’                    (அகம். 207 : 1-6)

(புள் ஒர்த்து - நன்னிமித்தம் பார்த்து. படை அமைத்து - வீரர் களை அமைத்து. கல் பிறழ் இயவு - பாறைக் கற்கள் உள்ள வழி)