பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு131

முசிறியின் ஓர் இடமாகிய பந்தர் என்னும் இடத் தில் விற்கப்பட்டன என்று பதிற்றுப்பத்து கூறுகின்றது. பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம் (பதிற்று 8ஆம் பத்து 4 ஆம் செய்யுள்) 7 ஆம் பத்து 7 ஆம் செய்யுளில் பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர் தெண்கடல் முத்தம் என்று கூறுகின்றது. பந்தர் என்பது அரபு மொழிச் சொல். இதன் பொருள் அங்காடி என்பது.

கவ்டல்லியரின் அர்த்தசாத்திரம் சேர நாட்டு முத்தையுங் கூறுகின்றது. அந்த முத்தை அர்த்தசாத்திரம் கௌர்ணெயம் என்று கூறுகின்றது. பெரியாற்றுக்குச் சூர்ணியாறு என்றும் ஒரு பெயர் உண்டு. பெரியாறாகிய சூர்ணியாறு கடலில் கலக்கும் புகர் முகத்தில் உண்டான படியால் அந்த முத்து சௌர்ணேயம் என்று கூறப்பட்டது. சூர்ணி யாற்றில் உண்டாவது சௌர்ணேயம். (தாமிரபர்ணியாற்றில் உண்டான முத்து தாம்ரபர்ண்ணியம் என்று கூறப்பட்டது போல) சௌர்ணேயம் என்றும் பெயர் மருவி கௌர்ணேயம் என்றாயிற்று.3

காவிரி ஆறு கடலில் கலக்கிற இடமாகிய காவிரிப்பூம் பட்டினத் திலும் அந்தக் காலத்தில் முத்தும் சங்கும் உண்டாயிருக்கவேண்டும். ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் முத்துச் சிப்பியும் சங்கும் உண்டாவது மரபு. ஆனால், காவிரி ஆற்று முகத்துவாரத்தில் முத்தும் சங்கும் உண்டாயிற்றா என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை.

யானைக் கோடு (தந்தம்)

மலைகளிலும் மலையைச் சேர்ந்த காடுகளிலும் யானைகள் இருந்தன. கொங்கு நாட்டைச் சேர்ந்த யானை மலைக்காடுகளில் யானைகள் அதிகமாக இருந்தன. கொங்கு நாட்டு யானை மலை களும் அதனைச் சேர்ந்த காடுகளும் அக்காலத்தில் உம்பற்காடு (உம்பல் - யானை) என்று பெயர் பெற்றிருந்தன. யானைகளைப் பிடித்துப் பழக்கி அவைகளைப் போர்க்களங்களில் போர்செய்வதற்குப் பயன்படுத்தினார்கள். அக்காலத்து அரசர்கள் வைத்திருந்த நான்கு வகையான சேனைகளில் யானைப் படையும் ஒன்று. குட்டுவன் என்னும் சேர அரசன் மிகப் பெரிய யானைப் படையை வைத்திருந்தபடியால் அவன் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்று பெயர் பெற்றான். (யானைச் செல் - யானைக் கூட்டம்) கொங்கு நாட்டை அக்காலத்தில் அரசாண்ட பொறையர் என்னும் சேர அரசர் யானைகளை அதிகமாக வைத்திருந்தார்கள். அவர் களுடைய யானைகள் பசு மந்தைகளைப் போலக் காணப்பட்டனவாம்.


3. (சேரநாட்டு முத்து மயிலை சீனி. வேங்கடசாமி, பக்கம் 493 – 498 தெ.பொ. மீ. மணிவிழா மலர்)