| பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 171 |
பாண்டியன் பல்யாகசாலை முது குடுமிப்பெருவழுதி தன் பகைவருடைய அரண்களை வென்று இடித்துத் தகர்த்துக் கழுதைகளைப் பூட்டிய ஏரினால் உழுதான் என்று புறநானூற்றுச் செய்யுள் கூறுகின்றது. கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய்தனை யவர் நனந்தலை நல்லெயில் (புறம். 15, பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமியை நெட்டிமையார் பாடியது.) அதியமான் மகன் பொருட்டெழினி, பகைவருடைய கோட்டையை அழித்துக் குருதி ஈரத்தோடு இருந்த அந்த இடத்தைக் கழுதைகள் பூட்டிய ஏரினால் உழுது வரகும் கொள்ளும் விதைத்தான் என்று இன்னொரு செய்யுள் கூறுகிறது. உருகெழு மன்னர் ஆரெயில் கடந்த நிணம்படு குருதிப் பெருமபாட் டீரத்து அணங்குடை மரபின் இருங்களந் தோறும் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும் வைகல் உழவ. (புறம். 392. அதிகமான் மகன் பொருட்டெழினியை ஒளவையார் பாடியது.) சேரன் செங்குட்டுவனும் பகைவரை வென்று கழுதை ஏர் உழுத செய்தியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறுகிறார். வடதிசை மன்னர் மன்னெயில் முருக்கி கவடி வித்திய கழுதையேர் உழவன் குடவர் கோமான் வந்தான். (சிலம்பு. நீர்ப்படை காதை, 225-227) இவ்வாறு சங்க இலக்கியங்களில், வென்ற அரசர் பகையரசரின் கோட்டைகளை அழித்துக் கழுதையினால் ஏர் உழுத செய்தி கூறப்படு கின்றன. இதே வழக்கம் வடநாட்டிலும் இருந்திருக்கிறது. காரவேலன் என்னும் கலிங்க நாட்டு அரசன் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் |