பக்கம் எண் :

222மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

களினால் பல ஊர்கள் அழிந்துபோனதைத், தமிழ் இலக்கியங்களும் செவிவழிச் செய்திகளும் கூறுகின்றன. முன் ஒரு காலத்தில்... .... ... இலங்கைத் தீவாக மாறிவிட்டது என்பதை நில நூல் வல்லவர் கூறுகின்றனர். பழைய இலங்கையிலும் இரண்டு கடல் கோள்கள் நிகழ்ந்ததை மகாவம்சம் கூறுகிறது. பழங்காலத்தில் பாண்டி நாட்டுக் குள்ளே (ஐந்து மைல் உள்ளே) வந்திருந்த கொற்கைக்குடாக்கடல், தாமிரபரணியாற்றினாலும் கடல் அலைகளினாலும் மணல் தூர்ந்து பையப் பையப் பிற்காலத்தில் மறைந்து, அந்தக்கடல் பகுதி நிலமாக மாறிவிட்டதையறிகிறோம். தொண்டை நாட்டில் கடற்கரையோரத்தில் இருந்த பவத்திரிக்கோட்டம் பிற்காலத்தில் கடலில் முழுகி மறைந்து போய், இப்போது பழவேற்காடு ஏரி என்று பெயர் பெற்றிருந்தது. இவ்வாறு ஒரு பெரிய கோட்டம் ஒன்று முழுகிப் போயிற்று. இராமநாதபுரத்தோடு இணைந்து கடலுக்குள் இருந்த நிலப் பகுதி, பிற்காலத்தில் உடையுண்டு, இப்போது இராமேசு வரத் தீவாக மாறிப் போயிற்று. இவ்வாறு தமிழகத்தின் கரையோரங் களில் பல அழிவுகள் ஏற்பட்டுள்ளன. மேற்கு கரையிலிருந்த பழைய சேரநாட்டிலும் பல கடற்கோள்களினால் கடற்கரைப் பட்டினங்களும் ஊர்களும் மறைந்து போயின. சேரநாட்டின் கடற்கரையோரத்தில் இருந்த பேர்போன மூலவாசம் என்னும் ஊர், புத்தக் கோவிலுக்குப் பெயர் பெற்றிருந்தது. அந்த ஊர் ஸ்ரீ மூலவாசம் என்று உலகப்புகழ் படைத்திருந்தது. பிற்காலத்தில் (கி.பி. 11-ம் நூற்றாண்டில்) அந்த ஊர் கடலினால் அழிக்கப்பட்டு மறைந்து போயிற்று.

இவற்றைப் போலவே, சேரநாட்டில் உலகப் புகழ் பெற்றிருந்த வஞ்சி மாநகரமும் முசிறிப் பட்டினமும் பிற்காலத்தில் கடலில் முழுகி, மறைந்து போயின. முதலில் கடற்கரைக்கு அருகில் இருந்த முசிறித் துறைமுகமும் பட்டினமும் அழிந்து போயின. பிறகு, பிற்காலத்தில் வஞ்சிமா நகரத்தின் பெரும்பகுதி ஊர்கள் மறைந்து போயின. இந்த நகரங்களின் அழிவுக்கு காரணமாக இருந்தது சுள்ளி ஆறாகிய பேரியாறுதான். மேற்குத் தொடர்ச்சிமலையில் அயிரிமலைமேல் தோன்றி, தரையில் இழிந்து நாட்டில் பாய்ந்து, கடலில் புகுந்த பேரியாறு, பல நூற்றாண்டுகளாக மணலை அடித்துக் கொண்டுபோய் கடலுக்கு அருகில் இருந்த துறைமுகத்தைத் தூர்த்துக் கொண்டு வந்தது. துறை முகத்தைத் தூர்த்துக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், இந்த ஆறே தூர்ந்துகொண்டு ஆழமில்லாமற் போயிற்று. முசிறித் துறைமுகம் மணல்