பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு241

என்று மாமூலனார் என்னும் புலவர் கூறுகின்றார். அக்காலத்து, திருவேங்கட மலையையும் அதைச் சூழ்ந்த நாட்டினையும் புல்லி என்னும் சிற்றரசன் ஆண்டான் என்றும் (அகம்., .......) அப்புலவரே கூறுகின்றார். அன்றியும், வேங்கடமலைக்கு அப்பால் உள்ள மொழி பெயர் தேயத்தில் வடுகர் வாழ்ந்ததாக அப்புலவரே கூறியுள்ளார்.

“புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து
நடையருங் கானம் விலங்கி நோன்சிலைத்
தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர்
பிழியார் மகிழர் கலிசிறந் தார்க்கும்
மொழிபெயர் தேஎம்....”                    (அகம்., 295)

எனவே, வேங்கடமலை தமிழ் நாட்டின் வடவெல்லை என்பதும், அம்மலைக்கு அப்பால் வேறு மொழி பேசப்பட்ட ‘மொழிபெயர் தேயம்’ இருந்தது என்பதும் வெள்ளிடை மலைபோல் விளங்குகிறது.

ஆனால், வேங்கடமலையைமட்டும் வடவெல்லையாகக் கூறியது எவ்வாறு பொருந்தும்? வேங்கடமலை தமிழகத்தின் வடக்கே குணகடல் முதல் குடகடல்வரையிலும் கிழக்கு மேற்காய் நீண்டு கிடக்கும் ஒரு மலையன்று; அது குணகடலின் பக்கமாகக் கிழக்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த ஒரு பகுதிமட்டுமே. எனவே, கீழ்க் கடற்பக்கமுள்ள ஒரு மலையைமட்டும் வடவெல்லையாகக் கூறியது தமிழ்நாட்டின் வடவெல்லையை முற்றும் குறிப்பிட்டமாகுமோ? தமிழ் நாட்டின் வடக்கே மேற்கடற் பக்கமாகவும் ஓர் எல்லை கூறவேண்டுவது இன்றியமையாததன்றோ? அவ்வாறு ஓரெல்லை இருந்தே தீர வேண்டும். இல்லையென்றால், அது தமிழகத்தின் வடவெல்லை முழுவதும் கூறப்பட்டதாகாது. கிழக்கு தொடர்ச்சி மலையிலுள்ள வேங்கடமலையை வடவெல்லையாகக் கூறியதுபோல மேற்குத் தொடர்ச்சி மலையிலும் ஓர் எல்லை கூறப்படவேண்டும். அவ்வாறு ஏதேனும் ஓர் எல்லை இருந்ததா? சங்க நூல்களில் இதற்கு ஏதேனும் விடை கிடைக்கின்றதா என்பதை ஆராய்வோம்.

இந்த ஆராய்ச்சிக்கும் மேற்குறித்த சங்கப் புலவர் மாமூலனாரே நமக்குத் தோன்றத்துணையாக இருந்து வழிகாட்டுகின்றார். குடகடலுக்கு அருகில், தமிழ் நாட்டின் வடஎல்லையாக ஒரு மலையை அவர் குறிப்பிடுகின்றார். அது ஏழில்மலை அல்லது ஏழிற் குன்றம் என்பது. தலைமகன் (காதலன்) பிரிவின்கண் தலைமகள் (காதலி)