பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு247

ராதல் வேண்டும். இடைகழி நாட்டுக்கு அண்மையிலே, தெற்குப் பக்கத்திலே நல்லியக் கோடனுடைய ஓய்மா நாடு இருந்தது.

இனி, நத்தத்தனார் சிறுபாணனை ஆற்றுப்படுத்திய பெரு வழியைக் காண்போம். இடைகழி நாட்டு நல்லூரிலிருந்து தெற்கே சென்றால், ஓய்மா நாட்டின் கிழக்குப் பகுதியாகிய பட்டின நாட்டை அடையலாம். பட்டின நாடு கடற்கரையைச் சார்ந்த நாடு. பட்டின நாட்டிலே கடற்கரை ஓரமாக எயில் (சோ) பட்டினமும் துறைமுகமும் இருந்தன. ஓய்மா நாட்டின் கடற்கரைப் பகுதியாகிய பட்டின நாடு, பெரும்பான்மையும் நீரும் நிலமுமாக அமைந்திருந்தபடியினாலே, அது மாவிலங்கை என்று பெயர் பெற்றது.

கடற்கரை ஓரமாக நீரும் நிலமும் ஆக அமைந்த இடம் இலங்கை என்று பெயர் பெறும். ஆறுகள் கடலில் கலக்கிற இடத்தில் கிளைகளாகப் பிரிந்து இடையிடையே நீரும் திடலுமாக அமைவது உண்டு. அன்றியும் காயல் என்னும் பெயருள்ள நீர்த்தேக்கமும் கடற்கரை ஓரமாக அமைவதும் உண்டு. இவ்வாறு நீரும் திடலுமாக அமைந்த இடத்தை லங்கா (இலங்கை) என்று ஆந்திர நாட்டவர் இன்றும் வழங்குவர். நீரும், திடலுமாக அமைந்திருந்த பட்டின நாடு மாவிலங்கை என்றும் பெயர் பெற்றிருந்தது. (லங்கா அல்லது இலங்கை என்பது பழைய திராவிட மொழிச் சொல் என்று தோன்றுகிறது.) இப்போதும் ஓய்மா நாட்டு மாவிலங்கைப் பகுதியில் ஏரிகளும் ஓடைகளும் உப்பளங்களும் காணப்படுகின்றன.

ஓய்மா நாட்டின் கடற்கரைப் பகுதியாகிய பட்டின நாட்டிலே, (மாவிலங்கையிலே), கடற்கரை ஓரத்தில் எயில் (சோ) பட்டினம் இருந்த தென்று கூறினோம். பண்டைக் காலத்தில் இருந்த எயிற் பட்டினம் இப்போது மறைந்துவிட்டது. அந்த இடத்தில் இப்போது மரக்காணம் என்னும் ஊர் இருக்கிறது. இவ்வூரில் பிற்காலச் சோழர்களின் சாசன எழுத்துக்கள் காணப்படுகின்றன. இந்தச் சாசனங்களிலே, ‘ஓய்மா நாட்டுப் பட்டின நாட்டு மரக்காணம்’ என்றும் ‘ஓய்மா நாட்டுப் பட்டின நாட்டுப் பட்டினம்’ என்றும் ‘பட்டின நாட்டு எயிற் பட்டினம்’ என்றும் இவ்வூர் கூறப்படுகிறது. எனவே, பழைய எயிற்பட்டினந்தான் பிற் காலத்தில் மரக்காணம் என்று பெயர் பெற்து என்று கருதலாம். இலக்கண விளக்கப் பரம்பரை சோமசுந்தர தேசிகர் அவர்கள் இப்போதைய கூடலூர்தான் பழைய எயிற்பட்டினம் என்று கருதுகிறார்.