பக்கம் எண் :

250மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

கிரேக்க ஆசிரியரின் குறிப்புகள்: யவனராகிய கிரேக்கர் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வரையில் தமிழகத்துடன் வாணிபம் செய்தனர். கிரேக்க நூலாசிரியர்கள், தமிழ் நாட்டிலிருந்த அக்காலத்துத் துறைமுகப் பட்டினங்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார்கள். அவற்றுள் சோபட்டினமாகிய எயிற்பட்டினமும் குறிக்கப்பட்டிருக்கிறது.

பெரிப்ளஸ் என்னும் நூலாசிரியர், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் கமரா, பொடுகா, சோபட்மா (Camara, poduca, sopatma) என்னும் துறைமுகப் பட்டினங்களைக் குறிப்பிடுகிறார். டாலமி என்னும் கிரேக்க நூலாசிரியரும் காமரா, போடுகே, மேலங்கே (Kamara, Poduke, melenge) என்னும் துறைமுகப் பட்டினங்களைக் கூறுகிறார்.