பக்கம் எண் :

64மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

பாண்டி நாட்டின் தலைநகரான மதுரை அக்காலத்தில் கோட்டை மதிலுக்குள் இருந்தது. கோட்டை வாயில்களில் யவன வீரர்கள் காவல் இருந்தனர். கோவலன் மதுரைக்குச் சென்றபோது கோட்டை வாயிலை யவன வீரர்கள் காவல் காத்திருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

‘கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு’

(சிலம்பு. ஊர்காண். 66-67)

பாண்டியனுடைய பாசறையில் யவன வீரர்கள் இருந்ததை முல்லைப் பாட்டு கூறுகிறது. முழங்கால் வரையில் குறுகிய பாவாடை போன்ற ஆடை (வட்டுடை) அணிந்து உடம்பில் மெய்ப்பை (சட்டை) அணிந்து குதிரையோட்டும் மத்திகையை (சம்மட்டியை)க் கையில் வைத்திருந்தனர். அவர்களுடைய தோற்றம் அச்சஞ் தருவதாக இருந்தது.

‘மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து
வலிபுணரி யாக்கை வன்கண் யவனர்’

என்று முல்லைப்பாட்டு (அடி 59-61) கூறுகிறது.

யவன - தமிழர் வாணிகத் தொடர்பின் காரணமாகச் சில கிரேக்க மொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. மத்திகை, சுருங்கை, கலம், கன்னல் முதலான கிரேக்க மொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. சங்கச் செய்யுட்களிலே இந்தச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.

மத்திகை என்பது குதிரை ஓட்டும் சம்மட்டி. இச்சொல் முல்லைப் பாட்டு 59ஆம் அடியில் பயிலப்பட்டுள்ளது.

சுருங்கை என்பது கிரேக்க மொழிச்சொல். சுரங்கம் என்றும் கூறப்படும். இது தரைக்குள் அமைக்கப்படுவது. ‘சுருங்கை நெடுவழி’ (பரிபாடல் 20:104) ‘சுருங்கை வீதி’ (சிலம்பு 14:65) “சுருங்கை - கரந்துறை ஒழுகுநீர் புகுகையை ஒருத்தருமறியாதபடி மறைத்துப் படுத்த வீதி” என்று அரும்பதவுரையாசிரியர் கூறுகிறார்.

கலம் என்னுஞ் சொல் கிரேக்கம். தமிழ் என்னும் இரண்டு மொழி களுக்கும் உரிய சொல். கிரேக்க மொழியில் (Kalom) கலம் என்னும் சொல்லுக்கு மரவீடு என்பது பொருள். இந்தச் சொல்லை யவனர் கப்பல் களுக்கும் பெயராக வழங்கினார்கள். யவனர் வாணிகத்தின்