பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 73 |
கூறியதன் காரணம் அது மலை என்பதற்காகவே. பழந்தமிழ் நாட்டின் வடஎல்லை வட பெண்ணையாற்றின் தென்கரையாக இருந்தது. தொண்டை நாட்டின் (அருவா நாட்டின்) இருபத்து நான்கு கோட்டங் களில் வடகோடிக் கோட்டமாக இருந்த பையூர் இளங்கோட்டம் வட பெண்ணை யாற்றின் தென்கரையில் இருந்தது என்பதைக் கல்வெட் டெழுத்துச் சாசனங்களில் அறியப்படுகின்றது. பழந்தமிழ் நாட்டின் வட எல்லைக்கும் பழைய ஆந்திர நாட்டின் தென் எல்லைக்கும் வரம்பாக வட பெண்ணையாறு அமைந்து இருந்தது. வட பெண்ணையாற்றின் முகத்துவாரத்தில் தென்கரை மேல் இருந்த கொல்லத்துறை அக் காலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது. கொல்லத்துறைத் துறைமுகத்தைப் பற்றிச் சங்கச் செய்யுட்களில் கூறப்படவில்லை. எல்லாத் துறைகளையும் கூறுவது அச்செய்யுட்கள் இயற்றப்பட்டதன் நோக்கமும் அன்று. தற் செயலாகத் தமிழகத்தின் சில துறைமுகப்பட்டினங்களை அச் செய்யுட்களில் சில கூறுகின்றன. அச் செய்யுட்கள் கூறாத வேறு சில துறைமுகப்பட்டினங்களும் இருந்தன. உதாரணமாக எயிற் பட்டினமாகிய சோ பட்டினத்துக்கும் (இப்போதைய மரக்காணம்) காவிரிப்பூம்பட்டினத்துக்கும் இடையில் ஒரு துறை முகமும் யவனரின் பண்டகசாலையும் இருந்தன. சோ பட்டினத்தையும் காவிரிப்பூம்பட்டினத்தையும் கூறுகிற சங்கச் செய்யுட்கள் இந்தத் துறைமுகத்தைக் கூறவில்லை. ஆனால் பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க நூலில் இந்தத் துறைமுகம் கூறப்பட்டுள்ளது. இத்துறை முகத்தை அந்நூல் போதவுக்கே (Poduke) என்று கூறுகிறது. புதுச்சேரிக்குத் தெற்கே யுள்ள அரிக்கமேடு என்னும் மண்மேட்டை 1945இல் தொல்பொருள் ஆய்வாளர் அகழ்ந்து பார்த்தபோது அங்குக் கி.பி. முதல் நூற்றாண்டில் செய்யப்பட்ட பொருள்களும் யவனர் (கிரேக்க- ரோமர்) களின் அக் காலத்துப் பொருள்களும் கிடைத்தன. அந்த இடம் அக்காலத்தில் துறை முகமாகவும் பண்டக சாலையாகவும் இருந்தது என்பது வெளியாயிற்று. பெரிப்ளூஸ் நூல் கூறுகிற ‘போதவுகே’ துறைமுகம் இதுதான் என்பதும் இப்போது அறியப்படுகிறது. ஆகவே, சங்கச் செய்யுட் களில் கூறப்படாத வேறு சில துறைமுகப்பட்டினங் களும் இருந்தன என்பதும் அவற்றில் கொல்லத் துறையும் ஒன்று என்பதும் தெரிகின்றது. கொல்லத்துறை கடைச்சங்க காலத்தில் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது. அங்குக் கடல் வாணிகமும் நடைபெற்றது. |