பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு85

கடைச் சங்க காலத்துப் புலவரான அம்மூவனார் ஐங்குறு நூற்றில் நெய்தற்றிணையில் தொண்டிப் பத்து என்னும் தலைப்பில் பத்துச் செய்யுட்களைப் பாடியுள்ளார். அது சேர நாட்டுத் தொண்டி. அந்தப் புலவரே அகநானூறு பத்தாம் செய்யுளில் பாண்டி நாட்டுத் தொண்டியைப் பாடியுள்ளார். இந்தத் தொண்டியை இவர் இவ்வாறு கூறுகிறார்.

‘கொண்ட லொடு
குரூஉத் திரைப் புணரி யுடைதரும் எக்கர்ப்
பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர்
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி’                    (அகம். 10: 8-13)

கிழக்குக் கடலிலிருந்து வீசுகிற கடற்காற்றுக் கொண்டல் காற்று என்பது பெயர். இந்தத் தொண்டி கிழக்குக் கடற்கரையிலிருந்தது என்பதைக் கொண்டல் காற்று வீசுகிற தொண்டி என்று கூறுவதிலிருந்து அறிகிறோம். இந்தத் தொண்டி பாண்டி நாட்டில் இப்போதைய இராமநாதபுர மாவட்டத்தில் இருந்தது என்று தோன்றுகிறது.

இந்தத் தொண்டித் துறைமுகத்தைச் சிலப்பதிகாரக் காவியமும் கூறுகின்றது. கடல் கடந்த நாடுகளிலிருந்து அகிற் கட்டை, சந்தனக் கட்டை, பட்டுத் துணி, சாதிக்காய், இலவங்கம், குங்குமப்பூ, கருப்பூரம் முதலான வாசனைப் பொருள்களை ஏற்றி வந்த நாவாய்கள் கொண்டல் காற்றின் உதவியினால் தொண்டித் துறைமுகத்துக்கு வந்ததையும் இறக்குமதியான அந்தப் பொருள்களைத் தொண்டியிலிருந்து பாண்டியனின் தலைநகரான மதுரைக்கு அனுப்பப்பட்டதையும் சிலப்பதிகாரம் கூறுகிறது.

‘ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகு கருப்பூரமும் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியரசு’.                    (ஊர் காண் காதை, 106-112)

இங்குக் குறிப்பிடப்பட்ட பொருள்கள் எல்லாம் கிழக்குக் கடலுக் கப்பால் கீழ்க்கோடி நாடுகளிலிருந்து வந்தவை. இந்தக் காலத்தில்