பக்கம் எண் :

88மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

மருங்கூர்ப் பட்டினம்

மருங்கூர்ப் பட்டினம் மருங்கை என்றும் கூறப்பட்டது. இது பாண்டி நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த துறைமுகம். பாண்டி நாட்டுப் புலவரான நக்கீரர், காயல்களும் (உப்பங்கழிகள்) தோட்டங்களும் உள்ள மருங்கூர்ப் பட்டினத்தின் கடைத்தெரு செல்வம் கொழித்திருந்தது என்று கூறுகின்றார்.

‘விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து
எல்லுமிழ் ஆவணம்’                    (அகம், 227: 19-21)

அங்காடியில் குவித்து வைத்திருந்த இறால்களைக் கவர்ந்து கொண்டு போய்க் காக்கைகள் துறைமுகத்தில் நிற்கும் கப்பல் களின் பாய்மரக் கம்பத்தில் அமர்ந்து தின்றன என்றும் அவர் கூறுகிறார்.

“அகலங்காடி யசை நிழல் குவித்
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப் பட்டினம்”

(நற்றிணை, 258: 7-10)

மருங்கூர்ப் பட்டினத்துக்கு மேற்கே அதைச் சார்ந்து ஊணூர் என்னும் ஊர் இருந்தது. ஊணூர் மதில் அரண் உடையதாக இருந்தது.

“கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர்
விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினம்”

(அகம், 227: 18-20)

ஊணூரைச் சூழ்ந்து நெல்வயல்கள் இருந்தன. ‘முழங்குகடல், ஓதம் காலைக் சொட்கும் பழம்பல் நெல்லின் ஊணூர்’ என்று மருதன் இளநாகனார் (அகம் 220) கூறுகிறார்.

சோழநாட்டிலிருந்த பேர் போன காவிரிப்பூம்பட்டினத்தின் துறை முகப் பகுதி மருவூர்ப்பாக்கம் என்றும் நகர்ப்பகுதி பட்டினப் பாக்கம் என்றும் இருகூறாகப் பிரிந்திருந்ததுபோல இவ்வூரும் மருங்கூர்ப் பட்டினம், ஊணூர் என்று இருகூறாகப் பிரிந்திருந்தன. காவிரிப்பூம் பட்டினத்தின் பட்டினப்பாக்கம் மதிலையும் அகழியையும் கொண்டிருந்தது போல ஊணூரும் மதில் சூழ்ந்திருந்தது.