பக்கம் எண் :

128மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 5

கொள்வதுதான் சாலப் பொருத்தம் ஆகும். இப்படிக் கொள்வதுதான் அந்தக் காலச் சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கிறது.

அடுத்த நான்கு எழுத்துக்கள் ‘குடுபித’ என்றிருக்கின்றன. இந்தச் சொல் ‘குடுப்பித்த’ என்றிருக்க வேண்டும். தகர ஒற்றெழுத்து எழுதப்படவில்லை. இது கற்றச்சனுடைய பிழையாக இருக்கலாம். குடு என்பதும் கொடு என்பதும் ஒரே பொருளுடைய சொற்கள். குடு, கொடு என்னும் சொற்கள் சாசனங்களில் பயின்று வந்துள்ளன.

இதற்கு அடுத்த இரண்டு எழுத்துக்கள் ‘கல’ என்று எழுதப் பட்டிருக்கிறது. இதைக் கல் என்று வாசிக்கிறோம். புள்ளியிடப்பட வேண்டிய எழுத்துக்கள் புள்ளியிடப்படாமலே பெரும்பாலும் எழுதப்படுகின்றன. ஆகவே இதைக் கல் என்று ஐயமில்லாமல் படிக்கலாம். கல் என்றால் மலை என்பது பொருள்.

கடைசி ஐந்து எழுத்து ‘கா ஞ ச ண ம’ என்றிருக்கிறது. புள்ளி வைக்க வேண்டிய எழுத்துக்களுக்குப் புள்ளி வைத்துப் படித்தால் ‘காஞ்சணம்’ என்று படிக்கலாம். இது தமிழ்ச் சொல் அன்று. பிராகிருத மொழிச் சொல்லாக இருக்கலாம். இதனுடைய நேரான பொருள் தெரியவில்லை. இந்த இடத்தில் இது கற்படுக்கைகளைக் குறிக்கிறது.

வெண் காஸிபன் கொடுப்பித்த கல் காஞ்சணம் என்று படிக்கிறோம்.

வெண்காசிபன் என்பவர் முனிவர்களுக்காக மலைக்குகையில் அமைத்துக் கொடுத்த கற்படுக்கை என்பது இதன் பொருள்.

அடிக்குறிப்புகள்

1. 407 of 1906.

2. Madras Epigraphy Report, 1907, p. 60.

3. The Caverns and Brahmi Inscriptions of Southern India. Krishna Sastri, pp. 327 - 348. Proceedings and Transactions of the First All India Oriental Research Institute, Poona 1922.

4. Proceedings and Transactions of the Third All India Oriental Conference, 1924.

5. New Indian Antiquary Vol. I, 1938-39. P. 364-65.

6. Early South Indian Palaeography, 1962. p. 221 - 223.

7. Corpus of the Tamil - Brahmi Inscriptions, p. 63. Seminar on Inscriptions, 1966, edited by R. Nagaswamy, p. 57 - 73.