பண்டைத் தமிழகம் ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள் | 143 |
திரு. ஐ. மகாதேவன் இவ்வாறு படித்துள்ளார்:6 ‘நல்லிய் ஊர்அ பிடந்தை மகள் கீரன் கொற்ற.....’ நல்லியூர் பிடந்தையின் மக்களான கீரன், கொற்ற(ன்)’ முதல் ஆறு எழுத்துக்களை இவர் ‘நல்லிய் ஊர’ என்று படித்திருப்பது தவறு என்று தோன்றுகிறது. பிராமி எழுத்தில் லகரத்துக்கும் ளகரத்துக்கும் சிறு வேற்றுமைதான் உண்டு. லகரத்தின் வலப் பக்கத்தின் மத்தியில் வளைந்த கோடு இட்டால் அது ளகரமாகிறது. கோடு இடாவிட்டால் லகரமாகிறது. இந்தச் சாசன எழுத்தின் நிழற்படத்தை உற்று நோக்கினால் ளகர எழுத்தாகத் தோன்றுகிறது. ஆகவே நள்ளி ஊர் என்பதே சரியாகும். ‘பிடந்தை மகள்’ என்று இவர் படிப்பது தவறு. எழுத்தில் ‘பிடந்தை மகன்’ என்றுதான் இருக்கிறது. மகள் என்று தவறாகப் படித்த இவர், மகள் என்பதற்கு மக்கள் என்று பொருள் கூறுகிறார். கீரன் கொற்றன் என்னும் ஒரே பெயரைக் கீரன் என்றும் கொற்றன் என்றும் இரண்டு பெயர்களாகக் கூறுகிறார். இந்த எழுத்துக்களை நாம் படித்துப் பொருள் காண்போம்: நள்ளிவ் ஊர்ப் பிடந்தை மகன் கீரன் கொற்றன் என்பது இதன் வாசகம். நள்ளி ஊரில் வாழ்ந்த பிடந்தை என்பவருடைய மகனான கீரன் கொற்றன் (என்பவர் கற்படுக்கையை அமைத்துக் கொடுத்தார்) என்பது இதன் பொருள். விளக்கம். நள்ளியூர் என்று எழுத வேண்டிய சொல்லை வகர ஒற்றுச் சேர்த்து எழுதியிருக்கிறது. இஃது எழுதினவரின் பிழையாகும். நள்ளி என்பவர் பெயரால் நள்ளியூர் இருந்தது என்பது தெரிகிறது. நள்ளி என்னும் பெயருள்ள கடையெழு வள்ளல்களில் ஒருவர் கூறப்படுகிறார். ‘நளிமலை நாடன் நள்ளி’ 7 ‘கழல்தொடித் தடக்கைக் கலிமான் நள்ளி’8 ‘திண்தேர் நள்ளி’9 ‘வல்வில் இளையர் பெருமகன் நள்ளி’10 ‘கொள்ளார் ஓட்டிய நள்ளி’11 கண்டிரம் என்னும் ஊரின் தலைவனான கண்டீரக்கோப்பெருநள்ளியைச் சங்கச் செய்யுள் கூறுகிறது. நள்ளியூரை இந்தப் பிராமி எழுத்துக் கூறுகிறபடியால் நள்ளி என்பவர் பெயரால் நள்ளியூர் ஒன்று இருந்தது என்பதை யறிகிறோம். |