பக்கம் எண் :

172மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 5

புகழையும் வாழ்த்திப் பாடுவது, கல் நாட்டு விழாவுக்கு ஊரார் மட்டும் அல்லாமல் சிறப்பாக வீரர்களும் வந்து சிறப்பு செய்வார்கள்.

போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் நடுகிற வழக்கம் பழந்தமிழகத்தில் மட்டுமல்லாமல் வேறு நாடுகளிலும் பழங்காலத்தில் இருந்து வந்தது. ஐரோப்பாக் கண்டத்திலும் சில நாடுகளில் நடுகல் நடுகிற வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. அந்த நடுகற்களுக்கு அவர்கள் மென்ஹிர் என்று பெயர் கூறினார்கள். மென்ஹிர் என்றால் நெடுங்கல்அல்லது உயரமான கல் என்பது பொருள். மென்ஹிர் (Menhir) என்பது பிரெடன் (Breton) மொழிச்சொல் (men = stone. Hir = High) இந்தோனேசியத் தீவுகள் எனப்படும் ஜாவா சுமத்திரா போன்ற கிழக்கிந்தியத் தீவுகளிலும் நடுகல் நடுகிற வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. இதனால், பழந்தமிழரைப் போலவே வேறு நாட்டாரும் நடுகல் நடுகிற வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகின்றது.

வீரர்களுக்கு நடுகல் நட்டதைச் சங்கச் செய்யுள்களில் காண்கிறோம். கரந்தைப் போரில் இறந்துபோன ஒரு வீரனுக்கு நடுகல் நட்டதை ஆவூர் மூலங்கிழார் தம்முடைய செய்யுளில் கூறுகிறார். (புறம். 261:13-15.) இன்னொரு கரந்தைப் போரில் வீரமரணம் அடைந்த ஒரு வீரனுக்கு வீரக்கல் நட்டபோது அவன் மீது கையறுநிலை பாடினார் புலவர் உறையூர் இளம்பொன்வாணிகனார். அந்த நடுகல்லின் மேல் அவனுடைய பெயரைப் பொறித்து மாலைகளாலும், மயிற் பீலிகளாலும் அழகு படுத்தியிருந்ததை அச்செய்யுளில் அவர் கூறுகிறார். (புறம். 264)

சேலம் மாவட்டத்திலிருந்த தகடூர் கோட்டையின் தலைவன் அதிகமான் நெடுமான் அஞ்சி. பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர அரசன் தகடூரின் மேல் படையெடுத்து வந்து அக் கோட்டையை முற்றுகையிட்டான். அதன் காரணமாகப் பல நாட்கள் போர் நிகழ்ந்தது. அப்போரில் அதிகமான் நெடுமான் அஞ்சி புண்பட்டு இறந்து போனான். அவனுக்கு வீரக்கல் நட்டு அவன் வீரத்தைப் போற்றினார்கள். அப்போது அவனுடைய புலவராக இருந்த ஒளவையார் கையறு நிலைபாடினார். (புறம். 232)

கோவலர் (ஆயர்) வளர்த்து வந்த பசுமந்தைகளைப் பகையரச னுடைய வீரர்கள் வந்து ஓட்டிக்கொண்டு போய்விட்டார்கள். இதனை யறிந்த அவ்வூர் வீரன் அவர்களைத் தொடர்ந்து சென்று வில்லை