பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள்175

“இருங்கவின் இல்லாப் பெரும்புல் தாடிக்
கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென
மருங்குல் நுணுகிய பேஎமுதிர் நடுகல்
பெயர்பயம் படரத் தோன்று குயிலெழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன்
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும்
சூர்முதல் இருந்த ஒமையம் புறவு.” (அகம் 297-5 :11)

உப்பு வாணிகராகிய உமணர் உப்பு மூட்டைகளை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று விற்பார்கள். செல்லும் போது வழியில் உள்ள நடுகற்களின் மேல் வண்டிச் சக்கரம் உராய்ந்து நடுகல்லில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களில் ஒன்றிரண்டு எழுத்துக்களைத் தேய்த்து விடுவதும் உண்டு. அவ்வாறு மறைந்துபோன எழுத்து இல்லாமல் மற்ற எழுத்துக்களைப் படிக்கிறவர்களுக்கு அதன் வாசகம் வேறு பொருளைத் தந்தது என்று மருதன் இளநாகனாரே மீண்டுங் கூறுகிறார்.

“மரங்கோள் உமண்மகன் பேரும் பருதிப்
புன்றலை சிதைத்த வன்றலை நடுகல்
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூருளி குயின்ற கோடுமாய் எழுத்தால்
ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்குங்
கண்பொரி கவலைய கானகம்” (அகம். 343: 4-9)

நடுகற்கள் பலவித உயரங்களில் அமைக்கப்பட்டன. மூன்று அடி உயரமுள்ள நடுகற்களும் பன்னிரண்டடி உயரமுள்ள நடுகற்களும் உண்டு.

இதுவரையில் கடைச்சங்க காலத்து (கி.மு. 300 முதல் கி.பி. 250 வரையில்) நடுகற்களைப் பற்றி ஆராய்ந்தோம். அக்காலத்து நடுகற்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. சங்க காலத்துக்குப் பிறகு கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும் தமிழ்நாட்டிலும், கன்னட நாட்டிலும் வீரர்களுக்கு நடுகல் நடுகிற வழக்கம் இருந்து வந்தது. பிற் காலத்து வீரக்கற்களில் பல நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்தப் பிற் காலத்து நடுகற்களில் பிற்காலத்து வட்டெழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் சங்ககாலத்து வீரக்கற்கள் ஒன்றேனும் இதுகாறும் கிடைக்கவில்லை.