பக்கம் எண் :

188மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 5

எழுதப்பட்டுள்ள இந்த சாசனத்தை ஐந்து வரியில் அமைத்துக் கீழே காட்டியுள்ளோம்.

பிராமி எழுத்தினால் எழுதப்பட்டுள்ள இந்தத் தமிழ் மொழிச் சாசனத்திலே தம்மம் (தர்மம்) என்னும் பிராகிருத மொழிச் சொல் காணப்படுகிறது. இச்சொல் பாலி என்னும் மாகதி மொழி அல்லது சூரசேனி என்னும் அர்த்த மாகதி மொழியிலிருந்து வந்திருக்க வேண்டும். ஏனென்றால் பௌத்தரும் ஜைனரும் இந்த மொழிகளைத் தங்கள் தெய்வ பாஷையாக அக்காலத்தில் வழங்கி வந்தார்கள். எனவே இந்தக் குகையில் வசித்த முனிவர் பௌத்த சமயத்தவராக வோ, ஜைன சமயத்தவராகவோ இருந்திருக்க வேண்டும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

இந்தச் சாசனத்திலிருந்து, கணியன் நந்தி என்னும் முனிவரின் பெயரும் அவருக்காக இக்குகையில் கற்படுக்கைகளை அமைத்த கடலன் வழுதி என்பவரின் பெயரும் இவர்கள் காலத்தில் பாண்டிய நாட்டையரசாண்ட நெடுஞ்செழியன் என்னும் அரசன் பெயரும் கூறப்படுகின்றன.

இந்தச் சாசனத்தின் வாசகம் இது:

கணிய் நந்தி அஸிரிய் ஈ

குவ்அ னிகெ தம்மம் ஈ
த்தஅ நெடுஞ்ச ழியன் ப
ணஅன் கடல்அன் வழுத்தி
ய் கொட்டுபித்தஅ பளிஈய்.