பண்டைத் தமிழகம் ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள் | 55 |
1. ‘குறு கொடுபிதவன் உபசஅன் உபறுவ’ குறு என்பது கூறு என்னும் சொல். இங்கு இது கற்படுக்கைகளின் ஒரு பகுதியைக் குறிக்கின்றது. கொடுபிதவன் என்பது சொல். உபசன் என்பது உபாசகன். குறுகோடுவைச் சேர்ந்த உபாசகனான உபறுவன் இதைக் கொடுப்பித்தான் என்பது இதன் பொருள். இதை வேறுவகையாக இப்படியும் படிக்கலாம்: ‘குறு கோடு பிதவான் ஊ பச-அன் ஊபறுவ’ குறுகோடு என்பதை ஓர் ஊர் அல்லது சிறு குன்று என்று பொருள் கொள்ளலாம். பிதவான் என்பது பிதா அல்லது பிதுர் என்னும் சொற்களுடன் சம்பந்தப்பட்ட சொல். இதன் பொருள் தந்தை என்பது. இது தூய்மையான துறவியைச் சுட்டுகிறது. உபசன் என்பது உபாசகன். உபறுவ என்பது ஓர் ஆளினுடைய பெயர். குறுபோட்டுத் தூய துறவியின் பக்தனான உபாசகன் உபாறுவன் என்பது இதன் திரண்ட பொருள். 2. ‘குறு கொடல்கு ஈத தூவின் செறு அதன் போன்’ குறு என்பது கூ. இங்குக் கற்படுக்கையின் ஒரு கூறைக் குறிக்கிறது. ஈத என்பதன் பொருள் இந்திரன். தூவின் என்பது மயில் இறகுக் கத்தை. செறு அதன் என்பது ஓர் ஆளின் பெயர். 3. ‘பாகன் ஊர் பொத்தன் பிடன் ஈத தூ வே போன்’ பானூர் என்பது ஓர் ஊரின் பெயர். பிடன் என்பது ஓர் ஆளின் பெயர். தூ வெ என்பது மயில் இறகுக் கத்தை. போன் என்பது பொன். பொன் என்பதன் பொருள் மலை (மேருமலை, பொன்மலை) மலைக்குகை என்பது. இந்த மூன்று கல்வெட்டெழுத்துக்களை நாம் படிப்போம். 1. குட்டு கொடுபிதவன் உபாசா அன் ஊபட்டூவ் ‘குட்டு கொடுப்பித்தவன் உபாசான் ஊபட்டுவ(ன்)’ என்பது இதன் வாசகம். குட்டு என்பது குன்று. கொடுபிதவன் என்பது கொச்சைச் சொல். இது கொடுப்பித்தவன் என்று இருக்க வேண்டும். உபாசாஅன் என்பதும் கொச்சைச் சொல். இஃது உபாசகன் என்றிருக்க வேண்டும். ஊபட்டுவன் என்பது உபாசனுடைய பெயர். |