பக்கம் எண் :

148மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 9

பிறகு சுபத்தர் தமக்குத் துறவு கொடுக்க வேண்டும் என்று பகவரை வணங்கி வேண்டிக்கொண்டார். பகவர், ஆனந்த தேரரை அழைத்துச் சுபத்தருக்குத் துறவு கொடுக்கும்படிச் சொன்னார். அவ்வாறே ஆனந்த தேரர் சுபத்தருக்குத் துறவு கொடுத்தார். கௌதம புத்தர் உயிரோடு இருந்தபோது கடைசியாகத் துறவு பெற்ற பௌத்த பிக்கு சுபத்தரே.

பிக்குகளுக்குப் போதனை

அதன் பிறகு பகவன் புத்தர், ஆனந்த மகாதேரரை அழைத்து இவ்வாறு அருளிச் செய்தார். “ததாகதர் நிர்வாணம்பெற்ற பிறகு சங்கத் தாரில் யாரேனும் பகவர் நிர்வாண மோட்சம் அடைந்து விட்டார். இப்போது நமக்குக் குருநாதன் இல்லை” என்று நினைக்கக்கூடும். அப்படி நினைப்பது தவறு. ஆனந்த! ததாகதரின் போதனைகள் சங்கத்தின் குருநாதனாக இருக்கட்டும். ததாகதரின் போதனைகளைச் சரிவர அறிந்து ஒழுகுங்கள்” என்று அருளினார்.

பிறகு பகவன் புத்தர் பிக்குகளை விளித்து, ததாகதரைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் சங்கத்தைப்பற்றியும் உங்களில் யாருக்கேனும் சந்தேகங்கள் இருக்கக்கூடும். ஏதேனும் ஐயம் இருந்தால் இப்போதே கேளுங்கள். உங்கள் ஐயங்களை விளக்குவேன். இப் பொழுது கேட்காவிட்டால் பிற்காலத்தில், ‘ததாகதர் இருந்த காலத்தில் எங்கள் சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் தெரிந்துகொள்ள வில்லையே?’ என்று பின்னால் வருந்தாதீர்கள்” என்று அருளிச் செய்தார்.

அப்போது பிக்குகள் எல்லோரும் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தார்கள். பகவன் புத்தர் மறுபடியும், ஐயமுள்ளவர்கள் சந்தேகம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார். அப்பொழுதும் பிக்குகள் மௌனமாக இருந் தார்கள். மூன்றாம் தடவையும் பகவர், ஐயங்களைக் கூறும்படி கேட்டார். அப்பொழுதும் அவர்கள் வாளா இருந்தார்கள்.

அப்போது பகவன் புத்தர், “ததாகதரிடம் உள்ள குருபத்தி காரணமாக உங்களுக்குள்ள ஐயப்பாடுகளை நேரில் கேட்க நீங்கள் அச்சப்படுவ தாக இருந்தால், நண்பர்களுக்கு நண்பர்களாக உங்களுக் குள்ளேயே சந்தேகங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று அருளிச் செய்தார்.