பக்கம் எண் :

தமிழில் சமயம் - கௌதம புத்தரின் வாழ்க்கை21

வழக்கம்போல ஆஷாடவிழா வந்தது. நகரமக்கள் அவ் விழாவை நன்கு கொண்டாடினர். அரண்மனையில் அரசியாராகிய மாயாதேவியாரும் இவ் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தார். ஆறு நாட்கள் விழாவைக் கொண்டாடிய பிறகு ஏழாம் நாளாகிய ஆஷாட பௌர்ணமியன்று மாயாதேவியார் நறுமண நீராடி நல்லாடை யணிந்து ஏழை எளியவருக்கும் ஏனையோருக்கும் உணவு உடை முதலியன வழங்கினார். பின்னர் தாமும் அறுசுவை உணவு அருந்தி அஷ்டாங்க சீலம் என்னும் நோன்பு நோற்றார். இரவானதும் படுக்கையறை சென்று கட்டிலிற் படுத்துக் கண்ணுறங்கினார். இரவு கழிந்து விடியற் காலையில் ஒரு கனவு கண்டார்.

மாயாதேவியார் கண்ட கனவு இது: இந்திரனால் நியமிக்கப் பட்ட திக்குப்பாலர்களான திருதராட்டிரன் விரூபாக்கன், விரூளாக்ஷன், வைசிரவணன் என்னும் நான்கு தேவர்கள் வந்து மாயாதேவியார் படுத்திருந்த படுக்கையைக் கட்டிலோடு தூக்கிக் கொண்டுபோய், இமய மலைக்குச் சென்று அங்கிருந்த மனோசிலை என்னும் பெரிய பாறை யின் மேலே ஒரு சால மரத்தின் கீழே வைத்து ஒரு புறமாக ஒதுங்கி நின்றார்கள். அப்போது அந்தத் தேவர்களின் மனைவியரான தேவிமார் வந்து மாயாதேவியாரை அழைத்துக் கொண்டுபோய் அருகிலிருந்த அநுவதப்தம் என்னும் ஏரியில் நீராட்டினார்கள். நீராட்டிய பின்னர் உயர்தரமான ஆடை அணிகளை அணிவித்து நறுமணச் சாந்து பூசி மலர் மாலைகளைச் சூட்டினார்கள். பிறகு, அருகிலே இருந்த வெள்ளிப் பாறையின் மேல் அமைந்திருந்த பொன் மாளிகைக்குள் மாயா தேவியாரை அழைத்துக் கொண்டுபோய் அங்கிருந்த ஒரு கட்டிலில் மேற்குப்புறமாகத் தலைவைத்துப் படுக்க வைத்தனர்.

மாயாதேவியார் படுத்திருந்த போது, அருகிலிருந்த மலைகளின் மேலே மிக்க அழகுள்ள வெள்ளையானையின் இளங்கன்று ஒன்று உலாவித் திரிந்து கொண்டிருந்தது. அந்த யானைக்கன்று பொன் நிறமான பாறைகளின் மேலே நடந்து மாளிகை இருந்த வெள்ளிப் பாறைக்கு வந்தது. பாறையின் வடபுறமாக வந்து தும்பிக்கையிலே ஒரு வெண்டாமரைப் பூவை ஏந்திக்கொண்டு பிளிறிக்கொண்டே மாளிகைக்குள் நுழைந்து மாயாதேவியார் படுத்திருந்த கட்டிலருகில் வந்தது. வந்து, கட்டிலை மூன்று முறை வலமாகச் சுற்றி, தேவியாரின் வலது பக்கமாக அவர் வயிற்றுக் குள் நுழைந்துவிட்டது.