பக்கம் எண் :

தமிழில் சமயம் - கௌதம புத்தரின் வாழ்க்கை47

ஓரிடத்தில் அமர்ந்து இருப்பதைக் கண்டார். “இவர் ஏன் இப்படி இருக்கிறார்?” என்று தேர்ப்பாகனைக் கேட்டார்.

“இவர் ஒரு துறவி - சன்னியாசி?!” என்று கூறினான் சன்னன்.

“இவர் என்ன செய்கிறார்?”

“பிறவித் துன்பத்தை நீக்கி மோட்சம் அடைவதற்கு இவர் தியானம் செய்து கொண்டு இருக்கிறார்?” என்று கூறினான் சன்னன்.

சித்தார்த்த குமரன் சிந்தனையில் ஆழ்ந்தார். மாளிகைக்குச் சென்றும் அவர் சிந்தனையில் மூழ்கியிருந்தார்.

சுத்தோதன அரசர் தன் மகனான சித்தார்த்தரை உலக இன் பத்தில் ஈடுபடச்செய்து அவரைச் சக்கரவர்த்தியாக்க எண்ணி எத்தனையோ இன்ப சுகங்களை அவருக்கு அளித்தும் அவை யாவும் பயன்படவில்லை. சித்தார்த்த குமரனுக்கு உலக வாழ்க்கையில் உள்ள துன்பங்களே தெரிந்தன. இன்பமான சுகபோகங்களிலேயே சூழப் பட்டிருந்தும் அவருடைய மனம் இன்ப சுகங்களை நாடவில்லை. துன்பம் இல்லாத ஒரு நிலையைக் காண அவர் எண்ணினார்.

சித்தார்த்தரின் சிந்தனை

தாம் கண்ட இக்காட்சிகளைப் பற்றிச் சித்தார்த்தக் குமாரன் தமக்குள் இவ்வாறு எண்ணினார் : மனிதராகப் பிறந்த மக்கள் மூத்துக் கிழவராகி நரை திரையடைகிறார்கள். முதுமை யடைந்த இவர்களை மக்கள் இகழ்ந்து வெறுக்கிறார்கள். எல்லோருக்கும் நரை திரை மூப்பு வருகிறது. நானும் நரை திரை மூப்பு அடை வேன். ஆகையால் கிழத்தன்மையைக் கண்டு அருவெறுப்புக் கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் நினைத்த போது அவருக்கிருந்த யௌவன மதம் (இளமையைப் பற்றிய பற்று) அவர் மனத்தைவிட்டு நீங்கியது.

பிறகு நோயாளியைப் பற்றி நினைத்தார். நோயும் பிணியும் எல்லோருக்கும் வருகின்றன. பிணியாளர்களைக் கண்டால் மற்றவர்கள் வெறுப்படைகிறார்கள். அவ்வாறு வெறுப்பது தவறு. நானும் நோயி லிருந்தும் பிணிகளிலிருந்தும் தப்ப முடியாது என்று எண்ணினார். அப்போது அவருக்கிருந்த ஆரோக்கிய மதம் (உடம்பைப் பற்றிய பற்று), அவரை விட்டு நீங்கியது.