பக்கம் எண் :

70மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 9

உறுதியற்ற பலவீனமான மனத்தை உடையவர்கள் இந்தச் சேனைகளினாலே உனக்குத் தோல்வி அடைகிறார்கள். உறுதியான பலமுள்ள மனத்தை யுடையவர்கள் உன்னை வெற்றி கொள்கிறார்கள். இந்த வெற்றியினாலே தான் ஏகாந்த சுகம் கிடைக்கும். நான் வெற்றிபெறாமல் திரும்புவேன் என்று நினைக்காதே, இந்தக் கிலேச3 யுத்தத்திலே நான் தோல்வியடைவேனானால் எனக்கு அவமானம் ஏற்படும். தோல்வி யடைந்து உயிர் வாழ்ந்திருப்பதைக் காட்டிலும் போர்க்களத்திலே இறந்துபடுவது மேலானது. சில சிரமணர்கள் இவ்விதக் கிலேச சேனைகளின் போராட்டத்தில் மன வுறுதியுடன் இராமல் மனச்சோர்வு அடைகிறபடியினாலே அவர்கள் தோல்வியடைகிறார்கள்.

இவ்வாறு கௌதம முனிவர் வசவர்த்தி மாரனிடம் கூறினார். இதைக்கேட்ட மாரன், “இவரை நம்மால் வெல்லமுடியாது” என்று தனக்குள்ளே கூறிக் கொண்டு போய்விட்டான்.

ஆனாபான ஸ்மிருதித் தியானம்

கௌதம முனிவர் மேலும் மேலும் கடுமையாகத் தவம் செய்தார்; நெடுங்காலம் செய்தார். அப்போது இவருக்கு இவ்வித எண்ணம் உண்டாயிற்று: “உலகத்திலே கடுமையான தபசு செய்கிறவர்களைவிட அதிகக் கடுமையாக நான் தவம் செய்கிறேன். அந்தத் தபசிகள் எனக்குச் சமானமானவர் அல்லர். என்னைவிடக் கடுந்தபசு செய்கிறவர் ஒருவரும் இலர். இவ்வாறு கடுந்தவம் செய்தும் நான் புத்த நிலையை அடையவில்லை. ஆகையால் இந்த முறையும் புத்த ஞானத்தை யடைவதற்கு வழியல்ல.”

இவ்வாறு கௌதம முனிவருக்கு எண்ணம் உண்டாயிற்று. அப்போது, சென்ற காலத்தைப் பற்றிச் சிந்தித்தார். தாம் சிறுவராக இருந்த காலத்தில், வப்பமங்கல விழாவில் தமது தந்தையார் நிலத்தை உழுதுகொண்டிருந்தபோது, தாம் செய்த ஆனா பானஸ்மிருதி தியானந்தான் புத்த பதவி அடைவதற்கு உதவியாக இருக்கும் என்றும் அந்தத் தியானத்தைச் செய்ய வேண்டும் என்றும் நினைத்தார். ஆனால், உடம்பு வற்றி ஒடுங்கிப் போன நிலையில் அந்த ஆனாபானஸ்மிருதி தியானத்தைச் செய்வது முடியாது. ஆகையினாலே உடம்புக்குச் சிறிது வலிவு கொடுத்து அதைத் தேற்றின பிறகு அந்தத் தியானத்தைச் செய்ய வேண்டும் என்று தமக்குள் எண்ணினார்.

இவ்வாறு எண்ணிய கௌதமமுனிவர், தமது பிச்சைப் பாத்திரத்தைத் தேடி எடுத்துக்கொண்டு, பிச்சை ஏற்பதற்காக உருவேல