பக்கம் எண் :

156மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 10

சுரமஞ்சரி தன் தோழியருடன் அங்கு வந்தாள். பிராமணக் கிழவன் நிற்பதைக் கண்டு “எங்கு வந்தீர்” என்று கேட்டாள்.

“குமரியாட” என்றார் கிழவன்.

இரண்டு பொருள்படும்படி இவ்வாறு கூறினான். கன்னியா குமரியில் நீராடப் போவதாகக் கூறுகிறான் என்று சுரமஞ்சரி கருதினாள்.

“குமரியாடினால் என்ன பயன்?” என்று கேட்டாள்.

“என்னை மூடியிருக்கும் மூப்புப் போய்விடும்.”

இதிலும் இரு பொருள்படும்படி அவன் கூறினான்.

“குமரியாடி மூப்பு நீங்கினவர் யாரேனும் உண்டா?” என்று சுரமஞ்சரி கேட்டாள்.

“துறையறிந்து ஆடினால் மூப்புத் தீரும்” என்றான் கிழவன்.

“ஏனையோர் அறியாத துறை உமக்குத் தெரியுமோ?

“நன்றாகத் தெரியும்.”

சுரமஞ்சரி தோழிகளிடம், “இந்தக் கிழப் பாப்பனன் பித்துக் கொள்ளி போல் தெரிகிறான். ஆனாலும், இவன் பசித்திருக்கிற படியால் உணவு சமைத்துக் கொடுங்கள்” என்று கூறினாள். பிறகு கிழவனை நீராடி வரும்படி சொன்னாள். கிழவன் நீராடி வந்து அமர்ந்தான். தோழிகள் உணவு கொண்டு வந்து பொன் தட்டில் இட்டுப் பரிமாறினார்கள். கிழவன் சாப்பிட்டுக் கொண்டே “இது போலச் சுவையான உணவு நான் உண்டதில்லை” என்று சொல்லி வியந்தான். சாப்பிட்டான பிறகு கிழவன் வெற்றிலையருந்தி ஓரிடத்தில் அமர்ந்தான். அப்போது சுரமஞ்சரி அவனைக் கேட்டாள்.

“உமக்கு என்ன வித்தை தெரியும்?”

“நான் மறை வல்லவன்?” என்று இரு பொருள் தரும்படி விடை கூறினாள்.

இவன் மறை (வேதம்) வல்லவன் என்று கருதி அவள், ‘எவ்வளவு கற்றீர்? என்று கேட்டாள்.

“பொருள் எய்தும் வரையில்” என்று விடை கூறினான் கிழவன்.