பக்கம் எண் :

190மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 10

அதை எடுக்கவேண்டும். யானையைச் சற்று நிறுத்து” என்று கூறினான். இதற்குள்ளாக யானை வெகுதூரம் வந்துவிட்டது. வேகமாகப் போகிற நிலையில், மிக அவசரமாய்ப் போக வேண்டியிருந்த நிலையில் அவன் யானையை நிறுத்தவில்லை.

நலமிகு புகழோய்! நாலிரு நூற்றுவில்
சென்றது கடிது இனிச் செய்திறன் இதன்மாட்
டொன்று மில்லை உறுதி வேண்டின்
தந்த தெய்வம் தானே தரும்.

என்று வயந்தகனுக்குக் கூறி உதயணன் யானையை வேகமாகச் செலுத்தினான். இவ்வாறு உதயணன் பிரயாணத்தின்போது தன்னுடைய கோடபதி யாழை இழந்து தன்னுடைய இராச்சி யத்துக்கு வந்து சேர்ந்தான்.

உதயணன் சிலகாலம் தன்னுடைய நகரத்தில் தங்கின பிறகு, மகதநாட்டு மன்னனுடன் நட்புக்கொள்ள விரும்பித் தன்னுடைய நண்பர்களுடனும் சேவர்களுடனும் புறப்பட்டுப் போனான். சில காரணங்களை முன்னிட்டு இவர்கள் தாங்கள் இன்னார் என்று தெரியாதபடி மாறுவேடம் பூண்டு சென்றார்கள். மகத நாட்டின் தலைநகரமான இராசகிரிய நகரத்தையடைந்தபோது சேவகர்கள், வெவ் வேறிடங்களிலும் உதயணனும் நண்பர்களும் வேறு இடங்களிலும் தங்கினார்கள். உதயணன் தன் நண்பர்களுடன் நகரக் கோட்டைக்கு வெளியே யிருந்த தாபதப்பள்ளியில் தங்கினான். அப்போது அவன் தன்னுடைய இயற்கை யுருவத்தை மறைத்து பிராமணன் போல மாறு வேடம் பூண்டிருந்தான். அவ்வமயம் காமகோட்டத்தில் காமதேவனுக்குத் திருவிழா நடந்து கொண்டிருந்தது. நகர மக்கள் காமகோட்டத்துக்கு வந்து காமதேவனை வணங்கிச் சென்று கொண்டிருந்தனர்.

நகரத்தில் கன்னிமாடத்தில் இருந்த பதுமாபதி என்பவள் தோழியரோடு பல்லக்கில் ஏறிவந்து காமதேவனை வழிபட்டாள். அவள் அவ்வூர் அரசனுடைய தங்கை. கோயிலுக்கு வந்த அவள், பிராமணன் வேடத்தோடு கோயிலுக்கு அருகில் இருந்த உதயணனைக் கண்டாள். அவனும் அவளைக் கண்டான். நாள் தோறும் கோட்டத்துக்கு வந்தபோதெல்லாம் பதுமாபதியும் உதயணனும் ஒருவரையொருவர் கண்டார்கள். அவர்களுக்குள் காதல் உணர்ச்சி ஏற்பட்டது.