வானமெனும் பந்தரிட்டு, வாருமழைத் தாரைகளை ஈனுமொளித் தோரணமா ஏற்றியங்குத் தொங்கவிட்டு,50 மின்னலெனும் நல்ல விளக்கேற்றி, வானத்தே துன்னுமுகிற் கூட்டந் துகிலாக மேல்விரித்து, ஆர்த்துவரும் மத்தளம்போல் அங்கே இடிமுழங்கச், சேர்க்கும் எழுவண்ணஞ் செய்யுமொரு வானவில்லை வண்ணமலர் கொண்ட மணமிக்க மாலையெனக் கண்ணழகன் சேயோன் கதிர்க்கையால் கொண்டுவந்து, மீன்களெனுஞ் சுற்றம் மிடைந்தங்குச் சூழ்ந்திருக்கத், தேன்கலந்த சொல்லாளைத் திங்களெனும் நல்லாளை வானவரும் *மீனவரும் வாய்மலர்ந்து வாழ்த்தெடுப்ப, வானவன் சூட்டிஒரு வாழ்க்கைத் துணைபெற்றான்;60 தீதறியா அந்தத் திருமதிதான் ஓரிரவில் காதலினாற் கொண்ட களியாட்டில் நாணிநிற்கச் செங்கதிரோன் மெய்தொட்டான்; சற்றே சினந்தவளாய் அங்கே கருமுகிலாம் ஆடை எடுத்துமுகம் மூடி மறைத்தருகில் ஊடிப் புலந்துநின்றாள்; ஓடித் துகில்பற்றி ஒண்முகத்தில் வாய்புதைத்தான்; வாய்மலர்ந்து தான்நகைத்தாள்; வானப் பெருவெளியில் **பாய்மலர்ந்து மின்னலெனப் பற்றிப் படர்ந்ததுகாண்; நெற்றியிற் பொட்டு நெடுங்கறை ஆகிவிடப் பற்றிய கையைப் பறித்துக்கொண் டோடிவிட்டாள்;70 பின்பற்றி ஓடியவன் பேதைதுகில் தொட்டிழுக்க முன்பற்று மேகலையின் முத்துகள் அத்தனையும் கொட்டிச் சிதறிக் குளிர்வானின் மேற்கிடந்து முற்றும் உடுக்கணமாய் அங்கே முகிழ்த்தனவோ? கட்டுப்பா டில்லாத காலத்தே இவ்விருவர் கட்டுப்பட் டில்லறங் கண்டமையால் தம்வாழ்வில்
*மீனவர் - விண்மீன் கூட்டம், **பாய் - பரவி |