பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 407 |
கல்வெட்டால் அறியமுடிகிறது. மேலும், இக் கல்வெட்டில் கடலன் வழுதி என்னும் பெருந்தச்சனைப்பற்றியும் குறிப்பிடப் பெற்றுள்ளது. இத் தச்சன் கற்படுக்கைகளின் தரையைச் செம்மைப்படுத்தினான். சடிகன், இளஞ்சடிகன் ஆகிய இருவருடைய பெயர்களும் இக் கல்வெட்டில் காணப் பெறுகின்றன.1 ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் இவன் பாடிய பாடலொன்று புறநானூற்றில் காணப் பெறுகிறது. இப் பாடல் கல்வியின் சிறப்பைச் சித்திரிக்கிறது. இதில் அக்காலத்திய நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பெற்றிருந்த குறிப்பும் காணப் பெறுகிறது.2 கோவலனைக் கொலைசெய்தவன் என்று சிலப்பதிகாரத்தில் கூறப்படும் பாண்டிய அரசன். ‘வடவாரியர் படைகடந்து தென்றமிழ் நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்’3 என்று குறிப்பிடப்படுகிறான். இவ்வாறு குறிப்பிடப்பெறும் ‘ஆரியப் படை கடந்த’ என்னும் தொடரும் புறநானூற்றைத் தொகுத்தவர் குறிப்பிடும் ‘ஆரியப்படை கடந்த’ என்னும் தொடரும் ஒன்றாக அமை வதால் இவ்விருவரும் ஒருவரே என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் இவனோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் இவனது வரலாற்று நிகழ்ச்சிகளே என்று கூறலாம்.
1. இந் நூல் அடிப்படைச் சான்றுகள் - II , கல்வெட்டு எண்கள் 1 முதல் 6 2. ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும்மனந் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் வேற்றுமை திரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே.’ (புறம், 183) 3. சிலப். 23 : கட்டுரை 14 - 18 |