| 168 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4 |
சித்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமா நாட்டில், முதலாம் ஆதித்த சோழனுக்குப் பள்ளிப்படை (கோட்டம்) அமைக்கப்பட்டிருந்தது என்று ஆர்க்கியாலஜி இலாகா அறிக்கை கூறுகிறது.2 எனவே, நடுகல் என்னும் வீரக்கல் சாதாரண வீரர்களின் பொருட்டும், பெரும்படை என்பது பெரிய அரசர்களின் பொருட்டும் அமைக்கப்பட்டன என்பது தெரிகின்றது. அடிக்குறிப்புகள் 1. (S.I.I. Vol. III, Part. I. Nos. 15, 16, 17). 2. Annual Report of the Archaeological Dept. South Circle, Madras, Part II 1915 - 16) 7. வாள் மண்ணுதல் தொல்காப்பியம் புறத்திணையியலில் “குடையும் வாளும் நாள் கோள் அன்றி” எனத் தொடங்குகிற சூத்திரத்தில் “வென்றவாளின் மண்ணு” என்று ஒரு துறை கூறப்படுகிறது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் “இருபெரு வேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ஙனம் வென்ற கொற்ற வாளினைக் கொற்றவைமேல் நிறுத்தி நீராட்டுதல்”, என்று எழுதுகிறார் வாள்மண்ணுதலுக்கு வாண்மங்கலம் என்றும் பெயர் கூறுவர். வாள்மண்ணுதலாகிய வாண் மங்கலத்துக்குச் சாசனச்சான்று கிடைத்திருக்கிறது. இந்தச் சாசனம் இராஷ்டிரகூட அரசன் கன்னர தேவன் (மூன்றாம் கிருஷ்ணன்) என்னும் அரசன் காலத்தில் கி.பி. 949 - 50 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. மைசூர் நாட்டில் மைசூர் மாவட்டத்தில் மந்தியா தாலுகாவில் ஆதகூர் என்னும் ஊரில் இந்தச் சாசனம் இருக்கிறது. கங்கவாடி தொண்ணூற்றாராயிரம் நாட்டை அரசாண்டவனாகிய பூதுகன் என்னும் சிற்றரசன், கன்னர தேவனுக்குக் கீழ்ப்பட்டவன். பூதுகனிடத்தில் மணலேரன் என்னும் ஒரு சேனைத் தலைவன் இருந்தான். அக்காலத்தில் கன்னர தேவனாகிய இராஷ்டிரகூட அரசனுக்கும் இராஜாதித்தியன் என்னும் சோழனுக்கும் போர் நடந்தது. இந்தப் போரிலே கன்னரதேவன் பக்கத்தில் பூதுகனும் அவனுடைய சேனைத் தலைவனாகிய மணலேரனும் போர்க்களஞ் சென்று போர் |